Published : 27 Apr 2018 10:33 AM
Last Updated : 27 Apr 2018 10:33 AM
கோ
டை விடுமுறை தொடங்க இருக்கிறது. செமஸ்டர் தேர்வு முடிந்தவுடன் கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கப் போகிறீர்கள்? வழக்கம்போல் வாட்ஸ்அப்பில் கண் விழித்து, ஃபேஸ்புக்கில் முகம் பதித்து, கொஞ்சம் சாப்பிட்டு, நன்றாகத் தூங்கிக் கழிக்கலாம் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், ஒன்றரை மாத கால விடுமுறையை இதே பாணியிலேயே கழிப்பது புத்திசாலித்தனமாக இருக்குமா? புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்; உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் மூழ்கலாம். இதற்கு சில சில கல்லூரி மாணவர்களும் வழிகாட்டுகிறார்கள்.
இன்று வீதிக்கு வீதி கோடை முகாம்கள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவர்களைப் பெற்றோர்கள் வலிந்து அங்கே அனுப்பி வைத்துவிடுகிறார்கள். கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை அவர்களது விருப்பத்துக்கு மாறாக யாரும் எதையும் திணித்துவிட முடியாது. எனவே, உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் புதிய விஷயங்களைக் கற்க நீங்கள் திட்டமிடலாம். இன்றைய இளைஞர்களில் ஏராளமானோர் இசை, நடனம், ஓவியம், போட்டோகிராபி போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள்.
இவற்றை முறைப்படி கற்றுக்கொள்ள கோடை விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் அது தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு காட்டலாம். விளையாட்டு வகுப்புகள், யோகா, நீச்சல், ஃபிட்னஸ் ஜிம் போன்ற வகுப்புகளைத் தேர்வு செய்யலாம்.
இவை மட்டுமல்ல, உங்களுக்குப் பிடித்த துறை அல்லது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களுக்காகவும் கோடை விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். “எனக்கு கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. என்னிடம் கார் இல்லை. ஆனால், அடிக்கடி நண்பர்களுடன் காரில் பயணிப்பேன். கார் ஓட்டத் தெரிந்த நண்பர்கள் மட்டுமே மாறிமாறி காரை ஓட்டுவார்கள்.
எனவே, காரை முறையாகக் கற்றுக்கொள்ளப் பயிற்சிப் பள்ளியில் சேரலாம் என்று இருக்கிறேன். இதன் மூலம் நானும் காரை ஓட்ட வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரசன்னா.
கோடை விடுமுறையையொட்டி சமூக ஊடகங்களில் ஒரு விழிப்புணர்வு வாசகம் அடிக்கடி கண்ணில் படுகிறது. ‘கிராமத்தில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டி எப்படி இருக்கிறார்கள்?’ என்பதுதான் அந்த வாசகம். இதையொட்டி தன்னுடைய கோடை விடுமுறைப் பயணத்தை அமைத்துக்கொள்ள இருக்கிறேன் என்கிறார் சென்னை பல்கலைக்கழக மாணவர் சந்திரமெளலி. “கிராமத்துக்குச் சென்றால் அங்கு வாழும் மனிதர்களிடம் பாடம் படித்துவிட்டு வரலாம்.
கிராமத்தில் உள்ள பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், விளையாட்டுகள், விவசாயத்தின் மூலம் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். இதன்மூலம் கிராமத்து கலாச்சாரத்தை முழுமையாக அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்” என்கிறார் சந்திரமெளலி.
கோடை விடுமுறையைத் தனக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் கழிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பிறருக்குக் கற்றுக்கொடுக்கலாம். அதன்மூலம் உங்களுக்குத் தெரிந்த விஷயத்தில் எப்போதும் ‘அப்டேட்’டாக இருக்க வாய்ப்பும் கிடைக்கும்.
“இந்தக் கோடை விடுமுறையில் எனக்குத் தெரிந்த பறை இசையை வியாசர்பாடியைச் சேர்ந்த இளைஞர்களுக்குக் கற்றுத் தரலாம் என்றிருக்கிறேன். இன்று பலரும் பிளாஸ்டிக் இசைக் கருவியை வைத்துக்கொண்டு பறை என்ற பெயரில் வாசிப்பதைப் பார்க்க முடிகிறது.
எனக்குப் பறை வாசிக்கத் தெரியும் என்பதால், தோலில் செய்த பறை மூலம் பறை இசையை நானும் என்னுடைய நண்பர்களும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க உத்தேசித்துள்ளோம். இதனால் எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுகொடுத்த ஆத்ம திருப்தி கிடைக்கும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவி கிருஷ்ணபிரியா.
வகுப்புகளுக்குச் செல்வது, படிப்பதுபோன்ற பயிற்சிகளுக்குச் செல்லப் பிடிக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால், குறைந்தபட்சம் புதுமையான பயணங் களுக்குத் திட்டமிடலாம். எப்படியோ ஏதாவது ஒரு வகையில் கோடை விடுமுறையை அர்த்தமுள்ள வகையில் கழித்தால், அது புதுமையான அனுபவத்தைத் தரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT