Published : 03 May 2024 11:11 PM
Last Updated : 03 May 2024 11:11 PM

‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ - இதய தானம் கொடுத்தவரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்த நபர்

கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.

கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.

அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.

அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார்.

இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x