Published : 01 May 2024 09:00 AM
Last Updated : 01 May 2024 09:00 AM

வெப்ப தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? - சுகாதாரத் துறை விளக்கம்

புதுச்சேரியில் சுட்டெரிக்கும் வெயிலால் மதிய நேரத்தில்  குடைபிடித்து செல்லும் பெண்கள். இடம்:நேருவீதி அடுத்தபடம்:  மதிய வெயிலில் பள்ளிக்கு குழந்தைகளை தலையில் தொப்பி அணிந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் தந்தை. கடைசிபடம்: வெப்பதிலிருந்து காத்துகொள்ள  தலையை மூடி செல்லும் பெண்கள். படங்கள்.எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: அதிக வெப்பத்தால் ஏற்படும் அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாதாரண மனித உடலின் வெப்பநிலை 36.4°சி முதல் 37.2°சி வரை இருக்கும். அதிக சூரிய வெப்பத்தால் அயர்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது உயிருக்கு ஆபத்தான நிலையாகும். இது உடல் அதிக வெப்ப வெளிப்பாட்டை கையாள முடியாத போது ஏற்படுகிறது.

தலைவலி, தலை சுற்றல், மயக்கம், தீவிர தாகம், குமட்டல் அல்லது வாந்தி, வழக்கத்துக்கு மாறாக அடர் மஞ்சள் சிறுநீர் கழித்தல், விரைவான சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு ஆகியவை வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள் ஆகும். ஆனால் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் உயர் உடல் வெப்ப நிலை, தலை வலி, தலை சுற்றல், மயக்கம், தசை பலவீனம் மற்றும் பிடிப்புகள், குமட்டல் மற்றும் வாந்தி, விரைவான இதயத் துடிப்பு, தெளிவற்ற பேச்சு, சூடான வறண்ட தோல், நடை தடுமாற்றம், குழப்பம் மற்றும் எரிச்சல், வலிப்பு அல்லது கோமா ஆகியவற்றுடன் சுய நினைவின்மை அதிக சூரிய வெப்பத்தால் ஏற்படலாம்.

அயர்ச்சி மற்றும் ஹீட்ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிடில் உயிருக்கு ஆபத்து நேரலாம். இவ்வாறு ஏற்படும் போது, அருகில் இருப்பவர்கள், அயர்ச்சிமற்றும் ஹிட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களை உடன டியாக மருத்துவ உதவிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை குளிர்ந்த, நிழலான பகுதிக்கு மாற்றி அதிகப்படியான ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் விழிப்புடன் இருந்தால், குடிக்க முடிந்தால் குளிர் திரவங்களை வழங்கலாம், தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, உப்பு நீர் கரைசல் ( ஓஆர்எஸ் ) அல்லது குளிர்ந்த நீரை சுயநினைவு உள்ளவர்களுக்கு மட்டும் குடிக்க வழங்க வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவின்றி இருந்தால் அவரை விரைவாக குளிர்விப்பது மிக முக்கியமான முதலுதவி ஆகும்.

அதற்கு அவரின் ஆடைகளை தளர்த்தி குளிர்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கவும், குறிப்பாக அக்குள் மற்றும் கவட்டியில் ஈரத்துண்டு, ஐஸ் பேக் மூலம் ஒற்றி எடுக்கவும், மின்விசிறியின் காற்று உடலில்படும் படி வைக்க வேண்டும். குளிர்சாதன அறை கிடைக்குமாயின் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உதவிக்கு 108 ஆம்புலன்ஸை உடனடியாக அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x