Published : 09 Jul 2014 09:00 AM
Last Updated : 09 Jul 2014 09:00 AM
ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் காவிரி நடுவர் மன்றக் கூட்டம் வரும் 15-ம் தேதி கூடுகிறது. இதில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள 726 டிஎம்சி தண்ணீரில் கேரளா – 30, கர்நாடகா – 270, தமிழகம் – 419, புதுச்சேரி – 7 டிஎம்சி என்ற வீதத்தில் பகிர்ந்து கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் வரையறைக் குழு ஆகியவற்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பில் சில விளக்கங்கள் கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த நீதிபதி என்.பி.சிங் 2012-ம் ஆண்டு ராஜினாமா செய்ததையடுத்து, மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த மே மாதம் நடுவர் மன்றத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பல்பீர் சிங் சவுகான் நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமரைச் சந்தித்து குழு அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பின் காவிரி நடுவர் மன்றம் கூடவில்லை. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் நீதிபதி பல்பீர் சிங் சவுகான் தலைமையில் வரும் 15-ம் தேதி நடுவர் மன்றம் கூடுகிறது.
இதில் பங்கேற்கும்படி தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT