Published : 27 Apr 2023 05:29 AM
Last Updated : 27 Apr 2023 05:29 AM

அடிமை மனப்பான்மையை ஒழிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கலாம் - சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் மாநாட்டில் பிரதமர்

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் நேற்று காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி,  சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் ‘சவுராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி’ புத்தகத்தை வெளியிட்டார்.படம்: பிடிஐ

புதுடெல்லி

அடிமை மனப்பான்மையை ஒழித்துக்கட்டுவதன் மூலமாக இந்தியாவை வளர்ச்சி காணச் செய்ய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நிறைவு விழாவில் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வோம். அடிமை மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவிப்பதன் மூலம் இந்தியாவை பாரம்பரியம், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றில் வளர்ச்சி காண செய்ய முடியும்.

2047-ம் ஆண்டுக்கான இலக்கை அடைவதில் தடைகள், அச்சுறுத்தல் கள் இருந்தபோதிலும் அவற்றை எதிர்கொள்வதில் இந்தியா தீரத் துடன் உள்ளது.

குஜராத் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே பாரம்பரிய பழக்கவழக் கங்களில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே நமது அனை வரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கம்தான் நாட்டிற்கு தற்போது அவசியமான ஒன்று. ஒத்துழைப்பு இருக்க வேண்டுமே தவிர, நமக்குள் கலாச்சார மோதல்கள் அவசியமில்லை.

அனைவரையும் இணைத்துக் கொண்டு முன்னேறிச் செல்வதுதான் இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம்.

சர்தார் வல்லபபாய் படேலுக்கும், மகாகவி சுப்ரமணிய பாரதிக்கும் இருந்த தேசிய உணர்வு, இந்தசவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள், நமது நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். தமிழகத்தில் உள்ள சவுராஷ்டிரா மொழி பேசும் மக்களை, அவர்களின் பூர்விக இடமான குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதிக்கு அழைத்துச் செல்லும் சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x