Published : 25 Apr 2023 02:06 PM
Last Updated : 25 Apr 2023 02:06 PM
திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அதேபோல், அதேபோல் 10 தீவுகளை இணைக்கும் கொச்சி வாட்டர் மெட்ரோ (நீர்வழி மெட்ரோ) சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, மாலப்புரம், கோழிகோடு, கண்ணூர், மற்றும் காசர்கோடு என 11 மாவட்டங்களை இணைக்கிறது.
காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு பிரதமர் வந்தார். அங்கிருந்து 11.30 மணிக்கு வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார். முதலாவது நடைமேடையில் இருந்து ரயிலைக் கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் ரயிலின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், மாநில முதல்வர் பினராய் விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோர் உடனிருந்தனர்.
"கேரளா மாநிலம் படிப்பறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் பெயர் பெற்ற மாநிலம். கடின உழைப்பும் மனிதாபிமானமும் இங்குள்ள மக்களின் அடையாளங்களில் ஒன்றாகும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதேபோல், நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கொச்சி 'வாட்டர் மெட்ரோ' அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் - விபின் மற்றும் விட்டிலா - கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். பீக் ஹவர்களில் உயர் நீதிமன்றம் - விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும்.
பயணிகளின் வசதியைக் கருதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20 முதல் ரூ.40 வரை டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சி 'வாட்டர் மெட்ரோ' திட்டமானது ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் கொச்சி 'வாட்டர் மெட்ரோ' சேவையில் இணைக்கப்படுகின்றன.
இவை தவிர, மின்மயமாக்கப்பட்ட திண்டுக்கல் - பழநி - பாலக்காடு வழித்தடப் பிரிவினையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், மேம்படுத்தப்பட இருக்கிற திருவனந்தபுரம், கோழிக்கோடு, வார்கால் சிவகிரி ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, திருவனந்தபுரத்தில் நடந்த பேரணியல் பேசிய பிரதமர், "மத்திய அரசு கூட்டாட்சியில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. கேரளா வளர்ந்தால், இந்தியாவும் வேகமாக வளரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT