Published : 07 Apr 2023 07:08 PM
Last Updated : 07 Apr 2023 07:08 PM
மும்பை: மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீருக்குள் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவின் மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் வரை புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜப்பானின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் நடைபெற்று வருகிறது. ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதுவரை 26 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 4 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தத் திட்டம் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என கூறப்பட்டது. எனினும், நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டம் முடிவடையும் காலம் தள்ளிப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் இருந்து புறப்படும் இந்த புல்லட் ரயில், மகாராஷ்டிராவில் ஒரு நிறுத்தத்தில் நிற்கும். அதன் பிறகு குஜராத்தில் சூரத் மற்றும் சபர்மதி ஆகிய இரு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் மகாராஷ்டிராவின் தானே பகுதியை ஒட்டி 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீருக்குள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தண்ணீருக்குள் பயணிக்கும் அனுபவத்தை பயணிகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT