Published : 02 Jul 2014 09:27 AM
Last Updated : 02 Jul 2014 09:27 AM
ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான புடவைகளை மதிப்பீட்டு குழுவினரால் ஆறரை மணி நேரத்தில் எப்படி சரியாக மதிப்பிட முடியும்?
சொத்து மதிப்பை அதிகமாக காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே மதிப்பீட்டுக் குழுவினர் அதன் மதிப்பை தவறாக காட்டியுள்ளனர் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
கடந்த திங்கள்கிழமை 8-வது நாளாக நடைபெற்ற இறுதிவாதத்தின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் வாதிடுகை யில், “போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்டபோது, 740 பட்டுப் புடவைகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியஸ்டர் ரக புடவைகளும் கைப்பற்றப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜெயலலிதாவிற்கு சொந்தமானது அல்ல. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி உள்ளிட்ட சிலரின் புடவைகளும் இருந்தன.
அந்த புடவைகளை மதிப்பீடு செய்வதற்காக ஜவுளித்துறையில் அனுபவம் மிகுந்த 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவினர், ஜெயலலிதா வின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகளை ஆறரை மணி நேரத்தில் மதிப்பீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பல்வேறு ரகம், தரம், விலையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகளை ஆறரை மணி நேரத்தில் மதிப்பிடுவது சாத்தியமில்லை” என்று தெரிவித்திருந்தார்.
திராட்சைத் தோட்டம்
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 9-வது நாளாக பி.குமார் மேற்கொண்ட இறுதிவாதத்தின்போது தெரிவித்ததாவது: “ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான திராட்சைத் தோட்டம், காலி இடம் மற்றும் கட்டிடத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 1997-ம் ஆண்டு சோதனையிட்டனர். அப்போது அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில வேளாண்துறை அதிகாரிகளும், நிலத்தை அளவிடும் கணக்காளர்களும் உடனிருந்தனர்.
சுமார் 10 பேர் அடங்கிய மதிப் பீட்டு குழுவினர் திராட்சைத் தோட் டத்தை பார்வையிட்டு, அங்கிருந்த விளைச்சலையும் கணக்கிட்டு மதிப் பிட்டுள்ளனர். 5 நாட்களில் மதிப்பீட்டு குழுவினரால் தோட்டத்தையும், தோட்டத்தில் விளைந்திருந்த திராட்சை யையும் எவ்வாறு துல்லியமாகக் கணக்கிட முடியும்?
காலியிடத்தின் மதிப்பை, அதை வாங்கிய தேதியில் வைத்து நிர்ணயிக்காமல், சோதனையிட்ட தேதியில் மதிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை பல லட்ச ரூபாய் உயர்த்திக் காட்டியுள்ளனர்.
மதிப்பீட்டு குழுவில் பணியாற்றிய அனைவரும் அப்போதைய திமுக ஆட்சியின் கீழ் பணியாற்றியவர்கள் என்பதால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை அதிகமாக காண்பித்து, சமூகத்தில் அவருக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதமாக செயல் பட்டுள்ளனர்'' என்றார்.
ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்னும் முடிவடையாத தால் அவரது வழக்கறிஞர் பி.குமாரை புதன்கிழமையும் தொடர்ந்து வாதிடு மாறு நீதிபதி டி'குன்ஹா அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT