Published : 19 Mar 2023 05:30 AM
Last Updated : 19 Mar 2023 05:30 AM

உணவு பாதுகாப்பு சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் உதவும் - சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்

டெல்லியில் நேற்று தொடங்கிய சர்வதேச சிறுதானிய மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பத்ம பாப்பம்மாள் சால்வை அணிவித்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி: சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது. இது நம் நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். சர்வதேச அளவில் சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறுதானிய பயிர் வகைகள் பாதகமான காலநிலையில், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் இன்றி சுலபமாக வளரும் தன்மை கொண்டது. இந்திய அரசின் சிறுதானிய திட்டத்தால் நாட்டில் உள்ள 2.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைவர்.

நம் நாட்டின் உணவுப் பழக்கத்தில் இப்போது சிறுதானியங்களின் பங்கு வெறும் 5 முதல் 6 சதவீதமாக உள்ளது. இந்த பங்கை அதிகரிக்க விஞ்ஞானிகளும் வேளாண் நிபுணர்களும் துரிதமாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் எட்டக்கூடிய இலக்கை நாம் நிர்ணயிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் உதவும்.

உணவு பதப்படுத்தும் துறையில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுப்பொருள் உற்பத்தியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 170 லட்சம் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது உலகளாவிலான சிறுதானிய உற்பத்தியில் 20 சதவீதம், ஆசிய அளவில் 80 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட, கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் பிரதமர் மோடி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x