Published : 21 Feb 2023 06:17 AM
Last Updated : 21 Feb 2023 06:17 AM

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு முறையீடு

புதுடெல்லி: குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட இந்த சம்பவம் வழிகோலியது.

ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனை யும் விதிக்கப்பட்டது. மேல்முறை யீட்டு வழக்கில் 31 பேர் தண்டிக் கப்பட்டதை குஜராத் உயர் நீதி மன்றம் உறுதி செய்தது. எனினும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள பலர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 17 ஆண்டுகள் சிறையில் இருந்த ரபீக் என்பவர் உட்பட 2 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 7 ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஜாமீன் மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குஜராத் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடுகையில், “பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட அரிதினும் அரிதான வழக்கு இது. ரயில் வெளியில் இருந்து பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

11 குற்றவாளிகளின் மரண தண் டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதை எதிர்த்து குஜராத் அரசு மேல்முறையீடு செய்துள் ளது. இதை அரசு தொடர்ந்து வலியுறுத்தும். சபர்மதி விரைவு ரயிலின் ஒரு பெட்டியை எரித்து பலரது மரணத்துக்கு வழி வகுத்ததால் இது வெறும் கல்வீச்சு வழக்கு மட்டுமல்ல. சிலர் தாங்கள் கல்வீச்சில் மட்டுமே ஈடுபட்டதாக கூறுகின்றனர். ஆனால் ஒரு பெட்டியை வெளியில் இருந்து பூட்டி, தீ வைத்த பிறகு அதன் மீது கற்களை வீசினால் அது கல்லெறிதல் மட்டுமல்ல" என்றார்.

இதையடுத்து குற்றவாளிகளின் தண்டனையின் அளவு, அவர்கள் இதுவரை சிறையில் கழித்த காலம் குறித்து அட்டவணை அளிக்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x