Published : 03 Jul 2014 10:52 AM
Last Updated : 03 Jul 2014 10:52 AM

பணத்துக்காக நெஸ் வாடியா மீது புகாரா?: நடிகை ப்ரீத்தி ஜிந்தா மறுப்பு

தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது போலீஸில் புகார் அளித்ததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

நெஸ் வாடியாவிடம் இருந்து பணம் பெற வேண்டும், என்னை பிரபலபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் போலீஸில் புகார் அளித்துள்ளேன் என்று சிலர் கூறியிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது என்று ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் நெஸ் வாடியா மீது பிரீத்தி ஜிந்தா ஜூன் 12-ம் தேதி இரவு மும்பை போலீஸில் புகார் செய்தார். மே 30-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது வாடியா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா இருவருமே முன்பு காதலர்களாக இருந்தவர்கள்.

இந்நிலையில் தன் மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து பேஸ்புக்கில் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளதாவது:

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அத்துமீறல் களும் தவறானவை. இருந்த போதிலும் இப்போதும் சிலர் பாதிக்கப் பட்ட பெண்கள் மீதே குற்றம்சாட்டு கின்றனர். ஆண்களால் பாதிக்கப் படும் பெண்களில் குறைவானவர் களே தைரியமாக புகார் தெரிவிக்க முன் வருகின்றனர். ஆனால் அவர்கள் மீதும் சிலர் தவறான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.

நான் எனது தனிப்பட்ட பிரச்சினையை போலீஸில் புகார் செய்துள்ளதாக சிலர் கூறியுள்ளனர். எது எனது தனிப்பட்ட விவகாரம்? எனக்கும் அவருக்கும் (நெஸ் வாடியா) இருந்த உறவு 2009-ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. எனவே நெஸ் வாடியா மீது நான் தெரிவித்துள்ள புகார் எனது தனிப்பட்ட விவகாரம் இல்லை.

நான் பணத்துக்காக புகார் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். முன்பு நான் குரோர்பதி நிகழ்ச்சியில் வென்ற பணத்தை வாடியா சிறுவர் மையத்துக்கு வழங்கியுள்ளேன். அவரது (நெஸ் வாடியா) கோ ஏர் நிறுவனத்துக்காக இலவசமாக விளம்பரத்தில் தோன்றியுள்ளேன். ஐபிஎல் அணியை வாங்கியபோது எனது சார்பாக ரூ.5 கோடியை அளித்ததுடன், நெஸ் வாடியா சார்பிலும் நான் ரூ.5 கோடியை அளித்தேன். அதன் பிறகு சில மாதங்கள் கழித்தே அவர் பணத்தை திரும்ப அளித்தார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. உண்மை இப்படி இருக்க பணத்துக்காக நான் புகார் தெரிவித்ததாக கூறியுள்ளது அபாண்டமான குற்றச்சாட்டு.

போலீஸ் புகார் அளித்து அதன் மூலம் பிரபலமடைய வேண்டு மென்ற கீழ்த்தரமான நோக்கம் எனக்கு இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை என்று ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x