Published : 14 Jan 2023 11:51 AM
Last Updated : 14 Jan 2023 11:51 AM
கோழிக்கோடு: "கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை பாஜகவால் 2024ம் ஆண்டு திரும்பவும் பெற முடியாது. அக்கட்சி நாடாளுமன்றத்தில் 50 இடங்களை இழக்கும்" என்று திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் பல மாநிலங்களில் அவர்கள் வெற்றியை பறிகொடுத்துள்ளனர்.
கடந்த 2019 ஆண்டு அவர்களின் (பாஜக) செயல்பாட்டைப் பார்த்தால், ஹரியாணா, குஜராத், ராஜஸ்தான் அனைத்து இடங்களிலும், பிஹார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும், வங்காளத்தில் 18 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.ஆனால் தற்போது அதே வெற்றியை அவர்களால் திரும்பவும் பெற முடியாது. 2024-ம் ஆண்டு பாஜக பெரும்பான்மையை இழக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல், பாலகோட் தாக்குதல்கள் கடைசி நிமிடத்தில் ஒரு பெரும் அலையை உருவாக்கின. ஆனால் அதுபோன்றதொரு விஷயம் திரும்பவும் நடக்காது. பாஜக 50 இடங்களை இழப்பதும், எதிர்க்கட்சிகள் பலன் பெறுவதும் நடக்கக்கூடும்.
ஒருவேளை பாஜக 250 இடங்களிலும் மற்றவர்கள் 290 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள் என்றால், அந்த 290 பேரும் ஒற்றுமையாக இருக்க ஒத்துக்கொள்வார்களா, அல்லது மத்தியில் ஆட்சியில் பங்கேற்க விரும்பும் கட்சிகளில்அங்கிருந்து 20, இங்கிருந்து 10 பேர் என எடுத்துக்கொண்டு பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைக்குமா என்பது நமக்குத் தெரியாது.
ஜனநாயகத்தில் வாரிசு அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய சவால் தான் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கம்யூனிஸ்டுகள், பாஜகவைத் தவிர, குறிப்பிடத்தகுந்த அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கிறது.
வாரிசு அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியை கைநீட்டும் அதே நேரத்தில் நாட்டைச்சுற்றியும் பார்க்க வேண்டும். முலாயம் சிங்கிற்கு பின்னர் அவரது மகன், லாலு பிரசாத் யாதவிற்கு பிறகு அவரது மகன், கருணாநிதிக்கு பின்னர் அவரது மகன், பால் தாக்ரேவிற்கு பின்னர் அவரது மகன் என அனைவரும் தலைவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு சசிதரூர் பேசினார்.
ஆசியாவின் மிகப்பெரிய இலக்கிய சந்திப்புகளில் ஒன்றாக கருதப்படும் "கேரளா இலக்கியத் திருவிழா" நோபல் பரிசு பெற்றவர்கள், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள், மூத்த அரசியல்வாதிகள், வரலாற்று ஆசிரியர்கள், திரையுல பிரபலங்கள், அரசு அதிகாரிகள், கலைஞர்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு திருவிழாவாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT