Published : 04 Jul 2014 09:48 AM
Last Updated : 04 Jul 2014 09:48 AM

பெங்களூர் நகைக் கடையில் தீ: சாலையில் தங்க மழை- தங்கம், வெள்ளி, வைர நகைகளை தூக்கி எறிந்தனர் ஊழியர்கள்

பெங்களூரில் உள்ள நகைக்கடையில் வியாழக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நகைக்கடை ஊழியர்கள் நகைகளை தீயில் இருந்து மீட்டு குவியல் குவியலாக சாலையில் தூக்கி விசினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக தங்க மழை பெய்தது.

பெங்களூர் எம்.ஜி. சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் முதலாவது தளத்தில் 'நவரத்னா' நகைக்கடை உள்ளது.

வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நகைக்கடையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகே திடீரென தீப்பிடித்து கடை முழுவதும் வேகமாக பரவியது.

சாலையில் தங்க மழை

இதனால் அதிர்ச்சி அடைந்த க‌டை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்கு நேரம் ஆகும் என்பதால் அவர்களே உயிரைப் பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நகைகள் தீயில் உருகிவிடும் என்பதால் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகைகளை எடுத்து துணிகளிலும், பிளாஸ்டிக் பைகளிலும், இரும்பு பெட்டிகளிலும் கொட்டி ஜன்னல் வழியாக‌ வெளியே தூக்கி எறிந்தனர்.

திட்டமிட்டபடி கடைக்கு வெளியே சாலையில் நின்றிருந்த கடை ஊழியர்கள் வட்டமாக நின்று கீழே விழும் நகைகளை 'கேட்ச்' பிடித்தனர்.மேலும் அங்குமிங்கும் சிதறிய மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட ஆபரணங்களை ஊழியர்கள் பாதுகாப்புடன் சேகரித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட உடன் நகைக்கடையில் இருந்து குவியல் குவியலாக நகைகள் கீழே விழுந்ததை பார்த்தது தங்க மழை பெய்தது போல் இருந்ததாக அங்கு கூடியிருந்தவர்கள் கூறினர்.

வங்கியிலும் தீ

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ, 2-வது மாடிக்கும் பரவியது. அங்கு செயல்பட்டு வந்த 'ஸ்டேட் பேங் ஆப் மைசூர் ' வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த‌னர்.பரபரப்பான எம்.ஜி.ரோட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து ‘நவரத்னா' நகைக்கடை அதிபர் கவுதம், ‘தி இந்து'விடம் கூறுகையில், 'நகைக்கடையின் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் எவ்வித உயிரிழப்பும், பெரிய அளவில் பொருள் இழப்பும் ஏற்படவில்லை.மிக சிறிய அளவில் மூவருக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய அனைத்து மருத்துவ செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.

தீ விபத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. கடையின் பின்புறம் இருக்கும் குப்பை சேகரிக்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்'' என்றார்.

நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கப்பன் பூங்கா போலீஸார், இது குறித்து விசார‌ணை நடத்தி வருகின்றனர். தீ விபத்திற்கு நகைக்கடையில் இருந்த குப்பைகள் அல்லது மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x