Published : 07 Jan 2023 11:37 AM
Last Updated : 07 Jan 2023 11:37 AM
பானிபட்: வரும், 2024 ஆம் ஆண்டு ஜன.1 ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் தயாராகிவிடும் என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அதைச் சொல்ல நீங்கள் என்ன ராமர் கோயில் பூசாரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை திரிபுராவில் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியை நீதிமன்ற வழக்குகள் மூலம் காங்கிரஸ் கட்சி தடுத்து வந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அங்கு கோயில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 2024-ம்ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும்." என்றார்.
தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் திரிபுராவின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமித் ஷாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை தற்போது ஏன் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஹரியாணா மாநிலம் பானிபட்டில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையின் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது கார்கே கூறியதாவது: எல்லோருக்கும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால், திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்தாண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்க இருக்கின்ற நிலையில், விரைவில் ராமர் கோயில் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நீங்கள் வெளியிடுகிறீர்கள்.
அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட நீங்கள் என்ன ராமர் கோயிலின் பூசாரியா? அல்லது மஹந்தா?. ராமர் கோயில் எப்போது திறக்கப்படும் என்பதை கோயில் பூசாரிகளும் மஹந்த்களும் சொல்லட்டும். நீங்கள் ஒரு அரசியல்வாதி. நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டுவது, சட்ட ஒழுங்கை பாதுகாப்பது, மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவது, விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது போன்றவையே உங்களின் வேலை.
தேர்தலுக்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த பாஜக, ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை மறந்துவிட்டது. நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பணவீக்க அதிகரிப்பால், அத்தியாவசிய பொருள்களைக்கூட சாமானிய மக்களால் வாங்க முடியவில்லை.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பொறியியல், மருத்துவம், மேலாண்மை உள்ளிட்ட பட்டங்கள் பெற்ற படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால் அரசாங்கத்திற்கு மோடிஜிக்கு அமித் ஷாவுக்கு இவைகளைப் பற்றி கவலை இல்லை.
வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலைமை, பணவீக்கம் குறித்து எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களின் எண்ணம் தேர்தலில் மட்டுமே உள்ளது.
ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசாங்கங்களை கவிழ்த்த பல்வேறு உபாயங்களைக் கையாண்டது. அவர்கள் தங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக கூறிக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கிறார்கள்.
அவர்கள் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு பொய்களைப் பரப்புகிறார்கள். இந்த அரசாங்கம் பொய்களின் அரசாங்கம். இந்த அரசாங்கம் இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றார்கள். உங்களுக்கு வேலை கிடைத்ததா?, ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவதாக சொன்னார்கள் உங்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்றார்கள். விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்றார்கள் இது எதுவும் நடைபெறவில்லை.
பாஜக வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பின்னர் அவைகளை மறந்து விட்டார்கள். அந்த வாக்குறுதிகள் அனைத்தும் வாக்குறுதிகளைப் பெறுவதற்கான வித்தை மட்டுமே. அவர்கள், வார்த்தைகளில் ராமரையும் கைகளில் கத்தியையும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் பிரிவினைவாத, வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால், நாட்டின் அனைத்து பிரிவு மக்களின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் பாடுபடுகிறது. நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கவும், அன்பினைப் பரப்பவும் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை வாக்கு வங்கியை மையமாகக் கொண்டு நடத்தப்படவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், பட்டியல் இனத்தவர் உள்ளிட்ட அனைத்து விளிம்பு நிலை மக்களின் நலன்களை காக்கவே நடத்தப்படுகின்றது. இவ்வாறு கார்கே பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT