Published : 21 Dec 2022 04:07 AM
Last Updated : 21 Dec 2022 04:07 AM
சென்னை: தூங்கும் வசதியுடன் தலா 16 பெட்டிகளை கொண்ட 200 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ஒரு வந்தே பாரத் ரயிலில் 887 பேர்பயணம் மேற்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா இடையே இயக்கப்படுகிறது. இதேபோல, அதிநவீன தொழில்நுட்பத்துடன் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. தற்போது, 7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணியை சென்னை ஐசிஎஃப் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தலா 16 பெட்டிகளைக் கொண்ட தூங்கும் வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட் டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டில் மிகவும் பிரபலமான ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இருப்பினும், இந்த ரயிலில் சேர் கார் வசதியுடன் அமர்ந்து பயணிக்கும் இடங்கள் மட்டுமே உள்ளன. தூங்கும் வசதி பெட்டிகளுடன் வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட தொலைவுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகள் அமைக் கப்பட உள்ளன.
வந்தே பாரத் ரயிலில் 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இடம்பெறும். ஒரு மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் 61 படுக்கைகளும், இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் 48 படுக்கைகளும், முதல்வகுப்பு ஏசி பெட்டியில் 24 படுக்கைகளும் இடம் பெறும். இப்பெட்டியில் மாற்றுத்திறனாளி பயணிக்கான வசதியும் செய்யப்படும். இதுதவிர, ஒவ்வோர் பெட்டியிலும் உதவியாளருக்கு படுக்கையுடன் ஓர் இடம் ஒதுக்கப்படும்.
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ரயில்வே துறை டெண்டர் அழைப்பு விடுக்க உள்ளது. மொத்தம் 200 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வந்தே பாரத் ரயில்கள் சென்னை ஐசிஎஃப் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள மராத்வாடா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT