Published : 07 Sep 2022 07:24 AM
Last Updated : 07 Sep 2022 07:24 AM
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக இரவில் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. திங்கள்கிழமை இரவு 131.6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. 1947-ம் ஆண்டுக்கு பின் தற்போது 130 மில்லிமீட்டருக்கு மேல் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத் தில் மிதக்கிறது. அதிலும் எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, சர்ஜாப்பூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடு களுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கட்டில், டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் நீரில் மூழ்கி நாசமாகின. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம் அடைந்துள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், கர்நாடக பேரிடர் மீட்பு குழுவினரும் ரப்பர் படகுகளின் மூலம் மீட்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிய அகிலா (23) என்ற தனியார் நிறுவன ஊழியர் வெள்ளத்தால் இடறி மின்கம்பத்தின் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என எங்குப் பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பேருந்து, ஜேசிபி, டிராக்டர் மூலம் ஊழியர்கள் அலுவலகத்துக்கு சென்ற வீடியோக்கள் வைரலாயின. இதை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெள்ளத்தால் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று விடுமுறை அறிவித்தன. இதேபோல வெளி வட்ட சாலையில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களும் விடுமுறையை அறிவித்தன. கனமழை காரணமாக ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள்சாய்ந்த தால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைக ளில் வெள்ளம் சூழ்ந்ததால் எலக்ட் ரானிக் சிட்டி, ஒயிட் ஃபீல்ட் போன்றஇடங்களில் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கூறியதாவது:
பெங்களூருவில் கனமழையால் அனைத்து ஏரி, குளங்கள், கால்வாய்களும் நிரம்பி வழிகின் றன. தற்போதைய வெள்ள பாதிப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டமிடப்படாத நிர்வாகமே காரணம். வெள்ள பாதிப்புகளை தீர்ப்பதற்காக அரசின் பேரிடர் மீட்பு குழு, மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இன்னும் 2 நாட்களுக்குள் தேங்கியுள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்படும்.
மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்
எனவே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். வெள்ளநிவாரண நிதியாக ரூ.300 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் பயன்பாட்டுக்காக ரூ.10கோடியில் ரப்பர் படகுகள் வாங்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
பெங்களூருவில் 10-ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT