Published : 06 Sep 2022 03:42 PM
Last Updated : 06 Sep 2022 03:42 PM

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு | “முந்தைய ஆட்சியே காரணம்” - விவரிக்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு நகரை சூழ்ந்துள்ள மழை வெள்ளம்

பெங்களூரு: பெங்களூரு நகரம் முழுவதும் மழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகக் குறைபாடே சாலைகளில் தண்ணீர் தேங்கியதற்குக் காரணம்” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றஞ்சாட்டியுள்ளார். “இருப்பினும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு நகரை மழை வெள்ளத்திலிருந்து மீட்டெடுக்க எனது அரசாங்கம் விறுவிறுப்பாக செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.

முதல்வர் பொம்மை மேலும் பேசுகையில், "கர்நாடக மாநிலத்திற்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த முறை எதிர்பாராத அளவுக்கு கடந்த 2 நாட்களாகக் கொட்டித் தீர்த்த அதிகன மழையால் வீடுகள், நிறுவனங்களில் வெள்ளம் சூழ்ந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடகாவில் அதுவும் குறிப்பாக பெங்களூருவில் இதுவரை இத்தகைய எதிர்பாராத அளவிலான பெருமழை பெய்ததில்லை.

கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. சில ஏரிகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளன. இன்னும் பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெங்களூரு நகரம் முழுவதுமே ஸ்தம்பித்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. ஆனால், அது உண்மையல்ல. ஒரு சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு கடுமையாக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாழ்வான பகுதியான மஹாதேவபுரா மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 69 குளங்கள் இருக்கின்றன. அவற்றில் பல உடைந்துவிட்டன. சில நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளன.

இந்த சவால்களை அரசு எதிர்கொண்டுள்ளது. பொறியாளர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். நிறைய ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித் தடங்களை சீரமைத்துள்ளோம். பேரிடர் கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரம் தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

மேலும், “முந்தைய காங்கிரஸ் ஆட்சி நகரில் எல்லா இடங்களிலும் கட்டிட அனுமதியை சரமாரியாகக் கொடுத்துள்ளனர். ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் அதிகமாகியுள்ளன. தற்போதைய துன்பத்திற்கு இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்தான் மிக முக்கியக் காரணம். ஏரிகள் அமைந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. முந்தைய ஆட்சியாளர்கள் ஏரிகளை தூர்வாரி பராமரிக்கவே இல்லை. ஏரியின் முகத்துவாரம் என்று பாராமல் கூட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். நான் இப்போது மழைநீர் வடிகால் பணியை கையில் எடுத்துள்ளேன். மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன். நேற்று ஒரேநாளில் ரூ.300 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் தடையில்லாமல் ஏரி, குளங்களுக்கு சென்று சேரும்.


மாண்டியா மாவட்டத்தில் உள்ள டிகே ஹல்லி நிரேற்று நிலையத்தை சீரமைத்து பெங்களூரு நகருக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் பணிகளும் நடந்துவருகின்றன. ஆனால், அந்தப் பணி நிறைவுபெற இரண்டு நாட்கள் முழுமையாக தேவைப்படுகின்றன. அதுவரை பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். நகரைச் சுற்றி 8000 போர்வெல்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x