Published : 04 Jun 2014 10:37 AM
Last Updated : 04 Jun 2014 10:37 AM
ஆந்திர மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதில் கடப்பா மாவட்டத்தில் வீட்டில் கூரை சரிந்ததில் 7 பேரும், கர்னூல் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 3 பேரும் நேற்று இறந்தனர்.
கடப்பா மாவட்டம், மைலவரம் மண்டலம், நவாபு பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ நாயுடு என்பவர் விபத்தில் உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் அக்கம்பக்கத்து கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனர். இதில் சுமார் 40 பேர், ஒரு வீட்டின் மீது அமர்ந்து இறுதிச் சடங்குகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மழையில் நனைந்திருந்த அந்த வீட்டின் கூரை திடீரென சரிந்தது. இதில் கூரை மீதிருந்த அனைவரும் இடுபாடுகளில் சிக்கினர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஜம்மல மொடுகு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இதுபோல் கர்னூல் மாவட்டம், கோகுலபாடு கிராமத்தில் பலத்த மழை காரணமாக, ஏரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நேற்று இண்டெர்மீடியட் துணைத் தேர்வு எழுதச்சென்ற 2 மாணவிகள், ஒரு மாணவியின் தந்தை ஆகிய 3 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கடப்பா மாவட்டம் ஜம்முலமொடுகு அருகே திங்கள்கிழமை இரவு இடி தாக்கியதில் விவசாயி ஒருவர் இறந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT