Published : 19 Aug 2022 08:51 AM
Last Updated : 19 Aug 2022 08:51 AM

ட்ரம்ப்பின் 36 மணிநேர இந்திய பயணத்துக்கு ரூ.38 லட்சம் செலவு - ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: கடந்த 2020-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் 36 மணி நேர இந்தியப் பயணத்துக்கு மத்திய அரசு சுமார் ரூ.38 லட்சம் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2020-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லிக்கு அவர் வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயரதிகாரிகள் வந்திருந்தனர்.

அகமதாபாத்தில் ட்ரம்ப் 3 மணிநேரம் செலவிட்டார். 22 கி.மீ. சாலைவழிப் பயணம் மேற்கொண்ட அவர், சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு புதிதாக கட்டப்பட்ட மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்று உரையாற்றினார். அதேநாளில் தாஜ்மகாலை பார்வையிட அவர் ஆக்ராவுக்கு பயணம் மேற்கொண்டார். மறுநாள் டெல்லிக்கு வருகை தந்த ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் 36 மணி நேர இந்தியப் பயணத்துக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மிஷால் பத்தேனா என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ட்ரம்ப் பயணத்தின்போது தங்கும் வசதி, உணவு, வாகன ஏற்பாடு போன்றவற்றுக்காக சுமார் ரூ.38 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படியே இந்த செலவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x