Published : 08 Aug 2022 05:46 AM
Last Updated : 08 Aug 2022 05:46 AM
எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2 செயற்கைக்கோள்கள் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தவறான சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதால் அவை செயலிழந்ததாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இதன் வர்த்தக மதிப்பு 60 முதல் 70 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்கா, சீனா உட்பட வளர்ந்தநாடுகள் வணிகரீதியாக சிறியரக செயற்கைக்கோள்களை ஏவுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியாவும்எடை குறைவான செயற்கைக்கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் பிரத்யேக ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் சிறிய செயற்கைக்கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) எனும் ராக்கெட்டை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.
இந்த புதிய எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ), ஆசாதிசாட் ஆகிய 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் நேற்று காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
திடீர் பின்னடைவு
தரையில் இருந்து புறப்பட்ட 12 நிமிடத்தில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் உள்ள 3 நிலைகளும் திட்டமிட்டபடி எரிந்து பிரிந்தன. அதன்பின், இறுதி பகுதியில் உள்ளவிடிஎம் கருவி மூலம் இஒஎஸ்-02,ஆசாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் திட்டத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டதால் ஆய்வு மைய வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டின் நிலை என்ன என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல்பயணமாக இஒஎஸ்-02 உட்பட 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ராக்கெட்டின் 3 நிலைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், இறுதிநிலையில் திடீரென தகவல் இழப்பு ஏற்பட்டது.
செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தத்தில் தவறு நடந்தது கண்டறியப்பட்டது. இஒஎஸ்-02,ஆசாதிசாட் செயற்கைக்கோள்களை தரையில் இருந்து 356 கி.மீ உயரமுள்ள புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குமாறாக, புவியில் இருந்து குறைந்தபட்சம் 76 கி.மீ தூரமும், அதிகபட்சம் 356 கி.மீ தொலைவும் கொண்டநீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. சென்சார் தொழில்நுட்பம் செயலிழந்ததால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திட்டமிட்ட பாதையை விட்டு செயற்கைக்கோள்கள் விலகும்போது அதிலிருந்து அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இதற்காக பிரத்யேக நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளின்படி எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காதவாறு எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்தயாரிக்கப்படும். தரையில் இருந்துகுறைந்த நீள்வட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் இருப்பதால் அவை படிப்படியாக கீழ்நோக்கி விழத் தொடங்கிவிட்டன. இனி அவற்றை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகஅளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்எஸ்எல்வி திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது அறிவியல் ஆர்வலர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT