Published : 18 Apr 2022 04:58 AM
Last Updated : 18 Apr 2022 04:58 AM

பிரிட்டன் பிரதமர் ஜான்சன் 21-ல் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை

புதுடெல்லி

புதுடெல்லி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏற்கெனவே 2 முறை இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் உறுதியாகியுள்ளது.

அதன்படி, 2 நாள் பயணமாக போரிஸ் ஜான்சன், வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார். அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு செல்கிறார். இதன் மூலம் குஜராத்துக்கு செல்லும் முதல் பிரிட்டன் பிரதமர் என்ற பெருமையை பெறவுள்ளார்.

22-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசுகிறார். அப்போது இந்தியா - பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

இந்திய பயணம் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, ‘‘எனது இந்திய சுற்றுப்பயணம் இருநாட்டு மக்களுக்கும் உண்மையில் முக்கியமான நிகழ்வாக அமையும், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி,பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் பலன் கிடைக்கும்’’ என்றார்.

வெளிநாடுகளுடனான வர்த்தக தொடர்பையும், பாதுகாப்பு துறைக்கான முதலீடுகளையும் மேற்கொள்வதில் இந்தியா ஆர்வம் காட்டிவருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தத்தையும் மேம்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களும், பொருள் உதவிகளும் அளித்து வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x