Published : 20 Mar 2022 05:39 AM
Last Updated : 20 Mar 2022 05:39 AM
பஞ்சாபில் பகவந்த் மான் தலைமை யிலான அமைச்சரவையில் 10 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண் டனர்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் கிராமத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த விழாவில் பஞ்சாபின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். அன்று அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை நேற்று விஸ்தரிப்பு செய்யப்பட்டது. புதிய அமைச்சரவையில் ஒரு பெண் உட்பட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஹர்பால் சீமா, குர்மீத் சிங் தவிர மற்ற 8 பேரும் முதல்முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
ஹர்பால் சிங் சீமா, குர்மீத் சிங் மீட் ஹேயர், டாக்டர் பல்ஜித் கவுர், ஹர்பஜன் சிங், டாக்டர் விஜய் சிஹ்லா, லால் சந்த், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லார், பிராம் சங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத் ரேயா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பஞ்சாப் அமைச்சரவையில் அதிகபட்சமாக முதல்வரையும் சேர்த்து 18 பேர் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுவரை 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில் மேலும் 7 இடங்கள் காலியாக உள்ளன.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை தேர்தலில் தோற்கடித்த பலருக்கு பகவந்த் மான் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் முதல்வர்கள் அமரீந்தர் சிங், சரண்ஜித் சிங் சன்னி, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலிதளம் தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா ஆகியோரை தோற்கடித்த யாருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதுதவிர அமன் அரோரா, பல்ஜிந்தர் கவுர், சர்வ்ஜித் கவுர் மனுகே உட்பட 2 முறை எம்எல்ஏக்களாக இருந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அடுத்தமுறை அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யப்படும்போது அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT