Published : 03 Jan 2022 08:10 AM
Last Updated : 03 Jan 2022 08:10 AM
மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலி்த்த முன்னேறிய வகுப்பினருக்கான 10%இடஒதுக்கீட்டுக்கு குடும்பத்தின் ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயித்தது நியாயமானதுதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘நீட்’ தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கெனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகை பெற ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்றும் இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
குழு அறிக்கை தாக்கல்
இதையடுத்து, ரூ. 8 லட்சம்வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது குறித்து ஆராய முன்னாள் நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்கோத்ரா, அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஆகியயோரைக் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு கடந்த டிசம்பர் 31-ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுபிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீடு சலுகை பெற ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ. 8லட்சம் நி்ணயிக்கப்பட்டது நியாயமானதுதான்.
சமூக சமநிலையை ஏற்படுத்தும் வகையில் ஆராய்ந்துதான் இதுநிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தனி நபர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 8 லட்சமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆண்டுவருமான வரம்பு ரூ. 8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது நியாயமானதாக நிபுணர் குழு கருதுகிறது.
எனவே, மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமான உச்ச வரம்பு என்ற அளவுகோல் தக்கவைக்கப்படும். அதாவது, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருந்தால் அவர்கள் இடஒதுக்கீட்டு சலுகையை பெறதகுதியானவர்கள். நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
குழப்பம் ஏற்படுத்தும்
இப்போது பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் சேர்க்கைக்கான அளவுகோல்களில் ஏதாவது மாற்றம் செய்தால் தேவையற்ற தாமதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
எனவே, இடஒதுக்கீடு பெறுவதற்கான அளவுகோல்களுக்கு நிபுணர் குழு தனது அறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள், பரிந்துரைகள் செய்தால் அது எதிர்காலத்தில் மட்டுமே அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு மீண்டும் ஜனவரி 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT