Published : 02 Jan 2022 06:23 AM
Last Updated : 02 Jan 2022 06:23 AM
நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 145.16 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாட்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா மொத்த பாதிப்பு 3 கோடியே 48 லட்சத்து 61, 579 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 5,368 ஆக இருந்த நிலையில், நேற்று 50 சதவீதம் உயர்ந்து 8,067 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மேற்கு வங்கத்திலும் புதிய பாதிப்பு 62 சதவீதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,128 பேர் பாதிக் கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக 3,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தினசரி பாதிப்பில் 2-வது இடத்துக்கு மேற்கு வங்கம் சென்றது.
டெல்லியில் புதிதாக 1,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினத்துடன் (1,313) ஒப்பிடுகையில், 37 சதவீதம் அதிகமாகும்.
கரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட இறப்புகளையும் சேர்த்து 353 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 406 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,81,486 ஆக உயர்ந்தது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 8,949 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 75 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு முன்பு 75 ஆயிரத் திற்கும் கீழ் குறைந்திருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண் ணிக்கை 1,04,781 ஆக அதிகரித் துள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடு்பபூசிகளின் எண்ணிக்கை 145.16 கோடியைத் தொட்டுள்ளது.இதில் நேற்று மட்டும் 58,11,487 பேர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 67.89 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 11,10,855 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
1,431 ஒமைக்ரான்
நாடு முழுவதும் புதிதாக 161 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
கரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பரிசோதித்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது முக்கியமானது.
ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வர 5 முதல் 8 மணி நேரம் ஆகும் என்பதால் நோய் தொற்றை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஆன்டிஜென் சோதனைகளை (ஆர்.ஒ.டி.) அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT