Published : 31 Dec 2021 07:38 AM
Last Updated : 31 Dec 2021 07:38 AM

உத்தராகண்டில் ரூ.17,500 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். உடன், உத்தராகண்ட் மாநில ஆளுநர் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர். படம்: பிடிஐ

டேராடூன்

உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பாஜக ஆட்சியில் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதனால், மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், உத்தராகண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

சார்தாம் பிராந்தியத்தில் உள்ள சாலையை விரிவுபடுத்துதல், நாகினா - காஷிபூர் நெடுஞ்சாலை, நமாமி கங்கை திட்டத்தின்கீழ் நீர்மின் நிலையம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குமோன் பகுதியில் எய்ம்ஸ், செயற்கைக்கோள் மையம் அமைத்தல், மொராதாபாத் – காஷிபூர் நாற்கர சாலை ஆகிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து ஹல்த்வானி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது:

பாஜக ஆட்சியின்கீழ் உத்தரா கண்ட் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டங்களால் உத்தராகண்ட் மேலும் வளர்ச்சி அடையும். மாநிலத்துக்குத் தேவையான போக்கு வரத்து, மின்சாரம், சுகாதாரம் என அனைத்தும் இந்த திட்டங்கள் மூலம் கொண்டுவரப்படும். இதனால் மாநிலத்தில் சுற்றுலா துறையும் பல மடங்கு மேம்படும்.

இதற்கு முன்பு உத்தராகண்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்கள் உத்தராகண்டின் வளங்களையும், மக்கள் பணத் தையும் மட்டுமே கொள்ளையடித்து வந்தனர். இப்போது பாஜக ஆட்சியில் மாநிலத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை கண்டு உத்தராகண்ட் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் சுயரூபத்தை மக்கள் கண்டுவிட்டனர். இனி ஒருபோதும் அவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாஜகவுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x