Published : 31 Dec 2021 07:41 AM
Last Updated : 31 Dec 2021 07:41 AM

நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

கோஹிமா

நாகாலாந்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது.

கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பரில் நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 1958-ம் ஆண்டு முதலே நாகாலாந்து பகுதியில் ஆயுத படைகள் சிறப்புச் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இதன்படி, வாரன்ட் இன்றி யாரையும் கைது செய்ய முடியும். அனுமதியின்றி சோதனை நடத்த முடியும். துப்பாக்கிச்சூடு நடத்த முடியும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில் கடந்த 4-ம் தேதி நாகாலாந்தின் மோன் மாவட்ட பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் ஒரு வாகனத்தின் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து ராணுவ முகாம்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்தார். நாகாலாந்து முழுவதும் சில நாட்கள் கலவரம் நீடித்தது. சர்ச்சைக்குரிய ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் நெபியு ரியோ உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றனர். சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நாகாலாந்து சட்டப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

நாகாலாந்தில் அமலில் இருக்கும் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் நேற்றுடன் காலாவதியானது. இதைத் தொடர்ந்து இந்த சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அரசாணை வெளியிட்டது. அதில், ‘நாலாகாந்தில் குழப்பமான, ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக மத்திய அரசு கருதுகிறது. மக்களின் உதவிக்கு ஆயுத படைகளை பயன்படுத்துவது அவசியம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘நாகாலாந்து பாதுகாப்பு தொடர்பாக கடந்த 23-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நாகாலாந்து முதல்வர் நெபியு ரியோ உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்டது.

சட்டத்தை திரும்ப பெறுவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.

நாகாலாந்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதை பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ளன.

இதுதொடர்பாக நாகா பழங்குடியின அமைப்பான நாகா ஹோஹோவின் பொதுச்செயலாளர் எலு டாங் கூறும்போது, ‘‘நாகாலாந்து மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை பயன்படுத்தி அப்பாவிகள் படுகொலை செய்யப்படுகின்றனர். சர்ச்சைக்குரிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x