Published : 31 Dec 2021 07:33 AM
Last Updated : 31 Dec 2021 07:33 AM

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உட்பட 14 நகரங்களில் கரோனா அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி

நாடுமுழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட 14 நகரங்களில் கரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கரோனா 2-வது அலை வேகமாக பரவியது. கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 13,154 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, குருகிராம், கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் கரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. டெல்லிக்கு அருகில் உள்ள ஹரியாணாவின் குருகிராமில் டிசம்பர் 15 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் 194 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. டிசம்பர் 22 முதல் 28 வரையிலான ஒரு வாரத்தில் கரோனா தொற்று 738 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதே காலகட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,039-ல் இருந்து 1,720 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் 1,494-ல் இருந்து 2,636 ஆகவும், பெங்களூருவில் 1,445-ல் இருந்து 1,902 ஆகவும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மும்பையில் 24 மணி நேரத்தில் 2,510 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளைவிட 82 சதவீதம் அதிகம். டெல்லியில் 923 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளைவிட 86 சதவீதம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு கடிதம்

இந்நிலையில், கரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு 8 மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஹரியாணா, டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய 8 மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது, மருத்துவமனை அளவிலான தயார் நிலை நடவடிக்கைகளை பலப்படுத்துவது, அதிக அளவில் தடுப்பூசி செலுத்துவது, கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கரோனா விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தி யுள்ளார்.

3-வது அலை

மகாராஷ்டிரா மாநில கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழு உறுப்பினர் மருத்துவர் ராகுல் பண்டிட் கூறும்போது, ‘‘டெல்லி, மும்பையில் கரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதை இப்போதுள்ள நிலைமைகள் காட்டுகின்றன. ஒமைக்ரான் தொற்றின் தாக்கத்தால் கரோனா தொற்று பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது. இதில், ஒமைக்ரானின் பங்கு எந்த அளவு உள்ளது என்பதை புரிந்துகொள்ள கடந்த சில நாட்களின் மரபணு வரிசை அறிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். இப்போதைய நிலையில் தொற்று பாதிப்பு கரோனா மற்றும் ஒமைக்ரானின் கலவையாக தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் பாதிப்பு 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 22,040 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் 82,402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 268 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,80,860 ஆக உயர்ந்துள்ளது.

961 பேருக்கு ஒமைக்ரான்

நாடு முழுவதும் 22 மாநிலங் களில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 961 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 263 பேரும், மகாராஷ்டிராவில் 257 பேரும் குஜராத்தில் 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் முறையே 69 மற்றும் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 320 பேர் குணமடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு 3-வது தவணை தடுப்பூசி

ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நோய் தாக்கும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு ஜனவரி 10-ம் தேதி முதல் 3-வது தவணை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கடந்த 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த நினைவூட்டல் குறுந்தகவலாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-வது தவணைக்கு எத்தகைய தடுப்பு மருந்தை பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான முடிவு ஜனவரி 10-ம் தேதிக்குள் எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x