Published : 29 Dec 2021 05:59 AM
Last Updated : 29 Dec 2021 05:59 AM
மத்தியபிரதேச மாநிலத்தில் மக்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் தனது ஊதியத்தையும் தரவேண்டாம் என்று அவர் நிறுத்தி வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கரம்வீர் சர்மா. கடந்த திங்கள்கிழமை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முதல்வரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக கரம்வீர் சர்மா ஆய்வு செய்தார். இதில் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கடும் கோபத்துக்கு ஆளான மாவட்ட ஆட்சியர் கரம்வீர் சர்மா, டிசம்பர் மாதத்திற்கான தனது சொந்த ஊதியம் மற்றும்சில உயரதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியரகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர்கூறும்போது, "மாவட்ட பஞ்சாயத்து ஆய்வின்போது அதிருப்தியடைந்த மாவட்ட ஆட்சியர் கடும்கோபம் அடைந்து ஆய்வின்போதே உடனடியாக ஓர் உத்தரவை தயார் செய்தார். அதில் மாவட்ட கருவூல அதிகாரிக்கு தனது சொந்த ஊதியம் உள்ளிட்ட உயரதிகாரிகள் அனைவருக்கும் சம்பளத்தை நிறுத்திவைக்கவும், இதனை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
100 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த உத்தரவுபிறப்பிக்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். நகரங்களில்தூய்மை தொடர்பான ஹெல்ப்லைன் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்ததற்காக துணை நகராட்சி துணை ஆணையர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கவும் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வருவாய்த்துறை வழக்குகளில் அலட்சியம் காட்டியதற்காக சில தாசில்தார்களுக்கும், பல்வேறு வழக்குகளை கையாள்வதில் மெத்தனமாக செயல்பட்டதற்காக செயல் பொறியாளர் பிஐயு (திட்ட அமலாக்கப் பிரிவு) ஆகியோரின் அகவிலைப்படியை நிறுத்தி வைக்குமாறும் ஆட்சியர்அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வரின் ஹெல்ப்லைன் தொடர்பான அனைத்துப் புகார்களையும் தீர்வு காண டிசம்பர் 31 வரை காலக்கெடுவை அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் கரம்வீர் சர்மா நிர்ணயித்துள்ளார். தவறினால் மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கரம்வீர் சர்மா அறிவுறுத்தியுள்ளார்" என்றார் அவர்.
ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ள நடவடிக்கைக்கு மக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பாராட்டுகள் குவிந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT