Published : 19 Dec 2021 06:20 AM
Last Updated : 19 Dec 2021 06:20 AM

3 நாட்களில் ஒன்றரை மடங்கு அதிகரித்த ஒமைக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி

உலக அளவில் 3 நாட்களில் ஒன்றரை மடங்கு ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை 113 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி உள்ளது.

இதற்கிடையில், உலக அளவில் கரோனா வைரஸின் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் கரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 93 ஆயிரம் பேருக்குகரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இங்கிலாந்து தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டபிள்யூஎச்ஓ வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு 3 நாட்களில் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக கடைப்பிடிக் கவேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதிக அளவு மக்கள் தொகை உள்ள நாடுகளில் இந்த வகை வைரஸ் வேகமாக பரவுகிறது. எனவே பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான படுக்கை வசதி உள்ளிட்டவற்றை மருத்துவமனைகள் தயார் செய்துகொள்ள வேண்டும்.

பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவில் இந்த வகை வைரஸ் வேகமாக பரவியுள்ளது. அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைகளை அதிகரிப்பது நல்லது. இதற்காக சம்பந்தப்பட்ட நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

70 மடங்கு வேகமாக பரவுகிறது

இதுகுறித்து டெல்லி பி.எஸ்.ஆர்.ஐ. மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் கில்நானி கூறியதாவது:

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. எனவே இப்போதே நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணைநோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்த கொள்கையை உருவாக்குவது அவசியம். இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனினும் இந்த வைரஸ் பரவும் வேகம் கவலையளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஷீபா மார்வா கூறும்போது, "முந்தைய கரோனா வைரஸ்களுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு வேகத்தில் பரவுகிறது. இந்த வைரஸ் காரணமாக இந்தியாவில் 3-வது கரோனா அலை ஏற்படக்கூடும்" என்றார்.

சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆசிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் 10 பேரில் 4 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இதனால் இந்த வைரஸ் பரவலை தடுப்பதில் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. 20 வயதுக்கு உட்பட்டோர் புதிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

ஒமைக்ரானால் வடஅமெரிக்க நாடுகளில் புதிய கரோனா அலைஏற்படக்கூடும். அதன் பிறகு ஐரோப்பாவிலும் ஆசிய நாடுகளிலும் புதிய அலைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் அனைத்து நாடுகளும் கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x