Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM
பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா. சபை வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பருவநிலை மாறுபாடு தொடர்பான வரைவு தீர்மானம் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை 12 நாடுகள் ஆதரித்தன. இந்தியாவும் ரஷ்யாவும் எதிர்த்து வாக்களித்தன. சீனா வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை. நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதால் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
வாக்கெடுப்பின்போது ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி பேசியதாவது:
பருவநிலை மாறுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம் பருவநிலை மாறுபாடு தொடர்பாக ஐ.நா. சபையின் 197 நாடுகளும் ஆலோசித்து தீர்மானிக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாடுகள் மட்டும் தீர்மானிக்க முடியாது. இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முடிவு எடுக்கும் அதிகாரம் சில நாடுகளின் கைகளுக்கு செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புவி வெப்பம் அதிகரிப்பதற்கு அமெரிக்கா, சீனா மற்றும் வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாடுகள் பருவநிலை மாறுபாட்டை தடுக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும். வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் மீது கட்டுப்பாடுகளை திணிக்கக்கூடாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT