Published : 04 Jun 2014 12:22 PM
Last Updated : 04 Jun 2014 12:22 PM
திருமணத்திற்காக ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக செலவு செய்தாலோ அல்லது 1,000 விருந்தினர்களுக்கு மேலாக திருமணத்திற்கு வந்தாலோ திருமண வீட்டாரிடம் ஆடம்பர வரி வசூலிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வரிப்பணத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான ஏழைகளின் திருமணத்திற்கும் உதவவும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா ‘தி இந்து'விடம் கூறுகையில், “பணக்காரர்கள் திருமணத்திற்காக கோடிக் கணக்கில் செலவு செய்து, ஆயிரக்கணக்கான விருந்தினர்களை அழைத்து ஆடம்பரமாக செய்கிறார்கள்.
திருமணத்தில் தான் தங்களுடைய குடும்ப செல்வாக்கையும் மரியாதையையும் உறவினர்களுக்கு காட்ட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்,சமீபத்தில் எனக்கு வந்த ஒரு திருமணப்பத்திரிக்கையின் விலைமட்டும் 10 ஆயிரம் ரூபாய். வெறுமனே படித்துவிட்டு தூக்கியெறியப்போகும் அழைப்பிதழுக்கு எதற்கு அவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்?
இதுபோன்ற ஆடம்பர திருமணங்களைப் பார்த்து, நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும்கூட அக்கம்பக்கத்தில் வட்டிக்குக் கடன் வாங்கி லட்சக்கணக்கில் செலவு செய்து தங்களது சக்திக்கு மீறி ஆடம்பரமாக திருமணம் செய்கிறார்கள். திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பல பெற்றோர்கள் தவிப்பதை பார்த்திருக்கிறோம்.
இதெல்லாம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் திருமணம் செய்துகொள்ள முடியாமல் எத்தனையோ முதிர்கன்னிகள் வாழ்கிறார்கள். எனவே, ஆடம்பர திருமணங்கள் செய்வோரிடம் வசூலிக்கப்படும் வரிப்பணத்தின் மூலம், ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.
ஆகவே தான், 1976-ல் இயற்றப்பட்ட கர்நாடக திருமண சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு, `சிக்கன திருமண சட்டத்தை' அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதன்படி திருமணத்திற்காக ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக செலவழித்தாலோ, திருமணத்தில் 1000-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டாலோ திருமண வீட்டாரிடம் ஆடம்பர வரி வசூலிக்க உத்தேசித்துள்ளோம்" என்றார்.
வரதட்சணை ஒழியும் கர்நாடக அரசின் இந்த புதிய திருமண சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் வரதட்சணை, மணமகள் வீட்டாரின் கடமை, திருமணத்திற்கு பிறகான பொறுப்பு என பல பெயரில் கோரப்படும் பணம், நகைபரிவர்த்தனைகளுக்கு சிக்கல் ஏற்படும். முக்கியமாக, பெற்றோரே பெண்களை பாரமாக நினைக்கும் சமூகத்தின் மனநிலை மாறும்' என பல முற்போக்காளர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கர்நாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன் கூறுகையில், "சமூக முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளில் முக்கியமானது சிக்கனமும் சேமிப்பும்தான். வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து குடும்பம் நடத்த முற்படும் நிலையிலேயே ஒவ்வொரு இளைஞரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என பெரியார் கூறியுள்ளார். இந்தக் கொள்கைக்கு ஏற்ப கர்நாடக அரசு, சிக்கனச் செலவு திருமண சட்டத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது" என கூறியுள்ளார்.
சட்டத்துக்கு எதிர்ப்பு
இதுதொடர்பாக கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், " இந்திய சமூகத்தில் ஆடம்பர திருமணங்கள் காலம்காலமாக நடந்து வருகின்றன. அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அரசு குறுக்கிடுவது குடிமக்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவது போன்றது. எனவே இந்த சட்டத்தை பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது'' என்றார்.
கேரளாவில் திருமணத்துக்கு ஆடம்பர வரி
கேரளாவில் கடந்த ஆண்டு ஆரம்பர திருமணங்களுக்கு வீணாகும் பொருட்செலவை கட்டுப்படுத்தும் வகையில் இதேபோன்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி திருமணத்தில் 500 விருந்தினர்களுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டால் அங்கு ஆடம்பர வரி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT