Published : 21 Jun 2014 04:57 PM
Last Updated : 21 Jun 2014 04:57 PM

கட்டண உயர்வு: ரயில்வே அமைச்சர் சரியான முடிவையே எடுத்துள்ளதாக அருண் ஜேட்லி கருத்து

ரயில் கட்டண உயர்வு நாடெங்கும் கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ள நிலையில் கடினமான, ஆனால் சரியான முடிவையே ரயில்வே அமைச்சர் எடுத்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

“சரக்குக் கட்டண வருவாயினால் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் இன்று சரக்குக் கட்டணமும் நெருக்கடிக்கு வந்துள்ளது எனவேதான் இந்த கட்டண உயர்வு” என்கிறார் அருண் ஜேட்லி.

ரயில் கட்டணங்களை உயர்த்தாமல் கடன் பொறியில் சிக்குவதா அல்லது ரயில் கட்டணங்களை உயர்த்துவதா என்ற இரட்டை நிலையில் அரசு நல்ல தெரிவையே மேற்கொண்டுள்ளது, “உயர்தரமான, உலகத் தரம் வாய்ந்த ரயில்வே வேண்டுமா அல்லது மோசமான ரயில்வே வேண்டுமா என்பதை அரசு தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.

ஆகவே, ரயில்வே அமைச்சர் கடினமான, ஆனால் சரியான முடிவையே எடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே பயணிகள் தாங்கள் பெரும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் கொடுப்பதினால் மட்டுமே இந்திய ரயில்வே தொடர்ந்து நீடிக்கும்” என்று ஜேட்லி கூறினார்.

கட்டண உயர்வை நியாயப்படுத்திய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜவடேகர் கூறுகையில், “ரயில்வே உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது, மக்கள் நல்ல வசதிகளையும் பாதுகாப்பையும் கோரி வருகின்றனர். கட்டண உயர்வு என்பது அதனை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x