Published : 10 Jun 2014 08:49 AM
Last Updated : 10 Jun 2014 08:49 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுக்க கர்நாடகா முடிவு

காவிரி குறித்த‌ வ‌ழ‌க்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என கர்நாடக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய‌ம் அமைப்பதைத் தடுப்ப‌து தொடர்பாக கர்நாடகாவின் அனைத்துக்கட்சி கூட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் தொடங்கியது. கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நானையா, கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்த்துக்குப் பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமய்யா செய்தியா ளர்களிடம் பேசியதாவது: ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தடுப்பது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. காவிரி, கிருஷ்ணா ஆகிய நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சியினரும், அனைத்து அமைப்பினரும் ஒரே அணியில் ஒற்றுமையாக செயல்படுவது என ஒரு மனதாக முடிவெடுத்துள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதனால் இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சரியான நேரம் அல்ல. அதனை அமைக்க மத்திய அரசு முற்பட்டால் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும். ஏனென்றால் இதனை அரசியலாக பார்க்கவில்லை. கர்நாடகாவில் உள்ள மக்களின் முக்கிய பிரச்சினையாக பார்க்கிறோம். எனவே எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை இரவே டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களான வெங்கய்ய நாயுடு, சதானந்தகவுடா, அனந்தகுமார், சித்தேஸ்வரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்படும். செவ்வாய்க்கிழமை காலை டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் அனைத்துக்கட்சி எம்.பி.க்களைக் கூட்டி இவ்விவாகரம் குறித்து ஆலோசிக்கப்படும். அதன்பிறகு கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என‌ வலியுறுத்த இருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x