Published : 21 Jun 2014 08:35 AM
Last Updated : 21 Jun 2014 08:35 AM
ரயில் கட்டண உயர்வு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த “பரிசு” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் கூறியதாவது:
வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கனிகளின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. இப்போது ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கனிகளின் விலை மேலும் அதிகரிக்கும். நடுத்தர, ஏழை மக்களின் தோள்களில் மோடி அரசு கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. ரயில்வே வரலாற்றில் இது அதிகபட்ச கட்டண உயர்வு. பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த கட்டண உயர்வு மக்களுக்கு மோடி அளித்த “பரிசு” என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது: மக்களுக்கு நன்மை செய்வேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, அவர்களின் தலையில் கூடுதல் பாரத்தை ஏற்றியுள்ளார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. ரயில் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.
பிருந்தா காரத்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறியதாவது: காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியால் மக்கள் ஏற்ெகனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மோடி அரசும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. ரயில் கட்டண உயர்வு அத்தியாவசியப் பொருள்களின் விலைஉயர்வுக்கு வழிவகுக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியதாவது:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்குள் தங்களின் உண்மையான சுயரூபத்தை பாஜக வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. மறுபக்கம் சாமானிய மக்களை நசுக்கும் வகையில் கட்டண உயர்வுகளை அறிவிக்கிறது.
லாலு, நிதிஷ்குமார்
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் ரயில்வே முன்னாள் அமைச்சருமான லாலு பிரசாத் கூறியதாவது: நல்ல காலம் பிறக்கிறது என்று கூறி மக்களை ஏமாற்றிய பாஜக இப்போது அவர்களை முட்டாளாக்கி உள்ளது. ரயில் கட்டண உயர்வு மூலம் மத்திய அரசு மக்களின் மார்பை குறிவைத்து முதல் கணையைத் தொடுத்துள்ளது. இதற்கு முன்பு வேறு எந்த அரசும் இதுபோல் ரயில் கட்டணத்தை உயர்த்தியது இல்லை என்றார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமார் கூறியபோது, ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்
நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு எதிராக ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் வகுப்பில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப் படுவார்கள். சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் அத்தியா வசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும்.
அதிகபட்ச சுமை: தொழில் துறையினர் கண்டனம்
ரயில் கட்டணம் உயர்வு குறித்து தமிழ் வர்த்தக சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் கட்டண உயர்வு குறித்து கூறியது:
ரயில்வே பயணிகள் கட்டணம் நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதற்காக ஒரே சமயத்தில் 14.2 சதவீத அளவுக்கு உயர்த்தியிருக்கத் தேவையில்லை. இதை சற்று குறைத்திருக்கலாம். ரயில்களில் பயணிகளுக்கான சலுகைகள், வசதிகளை அதிகரிக்க வேண்டும். ரயில் பயண பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.
சரக்குக் கட்டணமும் உயர்த்தப் பட்டுள்ளது மிகவும் எதிர்பாராதது. ஏற்கெனவே தொழில்துறை தேக்க நிலையைச் சந்தித்து வரும் நிலையில் இந்த உயர்வு தொழில்துறையை வெகுவாகப் பாதிக்கும். இனி வரும் காலங்களிலாவது ரயில்வே துறையை நவீன மயமாக்க முயற்சிக்க வேண்டும். மேலும் இத்துறையில் தனியார் முதலீடு குறைவாக உள்ளது. பிபிபி அடிப்படையில் முதலீடுகளை ஈர்க்க ரயில்வே துறை முயற்சிக்க வேண்டும். சரக்குப் போக்குவரத்துக்கு சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு பிரத்யேக சரக்கு ரயில் தண்டவாளங்களை அமைப்பதன் மூலம் பொருள் போக்குவரத்து அதிகரிக்கும், பொருளாதாரமும் வளரும். இரட்டை அடுக்கு பெட்டக வசதிகொண்ட சரக்கு ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரஃபீக் அகமது (ஃபிக்கி செயலர்)
எந்த கட்டண உயர்வும் நுகர்வோரைத்தான் அதிகம் பாதிக்கும். சரக்குக் கட்டண உயர்வு காரணமாக ஏற்படும் செலவு கடைசியாக நுகர்வோர் தலையில்தான் விடியும். ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்த கட்டண உயர்வு தேவையற்றது.
சிமெண்ட் உற்பத்தியாளர்கள்
சரக்குக் கட்டணம் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது சிமெண்ட் துறையை பெரிதும் பாதிக்கும். ஏற்கெனவே ரியல் எஸ்டேட் முடங்கியுள்ள நிலையில் பல சிமெண்ட் ஆலைகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இத்தகைய சூழலில் இந்த உயர்வு பெரிதும் ஆதிக்கும் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிமெண்ட் துறையைப் பொருத்தமட்டில் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் சரக்கு ரயில் மூலம்தான் அனுப்பப்படுகிறது. இந்த கட்டண உயர்வு நிச்சயம் சிமெண்ட் விலையில் எதிரொலிக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT