Published : 05 Jun 2014 09:27 AM
Last Updated : 05 Jun 2014 09:27 AM
மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு முதலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் மட்டுமே அடிபட்டது. பிறகு மூத்த காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங், கமல்நாத், முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி என பலருடைய பெயர்களும் அந்த பட்டியலில் அணிவகுத்தன.
காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான சில காங்கிரஸ் தலைவர்களே அந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அந்தப் பதவி 72 வயதான மல்லிகார்ஜுன கார்கேவை தேடி வந்திருக்கிறது.
`50 ஆண்டுகால அரசியலில் நேர்மையும், விடாப்பிடியாக கடைபிடித்த தூய்மையும், துளியும் நடிப்பில்லாத எளிமையும், கறைபடியாத கரங்களுமே இதற்கு காரணம்' என விளக்கம் தருகிறார்கள் அக்கட்சியினர். எவ்வித பின்புலமும் இல்லாத ஏழை குடும்பத்தில் இருந்து வந்த கார்கே, உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் காமராஜரைப் போன்றவர் என்கிறார்கள்.
தோல்வியே காணாதவர்
கர்நாடகாவின் கடைகோடியில் இருக்கும் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள வர்வாட்டி எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் கார்கே. 1969-ல் காங்கிரஸில் இணைந்தார்.
காங்கிரஸை அறிந்திராத குல்பர்காவின் ஒவ்வொரு குக் கிராமத்திற்கும் கட்சியை கொண்டு சென்றதால் அடுத்த ஆண்டே நகரசபை தலைவர் ஆனார். 1972-ல் குர்மிட்கல் சட்டப்பேரவை தொகுதியில் களமிறங்கிய கார்கே, முதல் முறையே மகத்தான வெற்றி பெற்றார். அப்போது தொடங்கிய அவரது வெற்றிப்பயணம், 1979, 1983, 1985, 1989, 1992, 1994, 1999, 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 9 முறை வெற்றி பெற்றார்.
மாநில அரசியலில் மகுடம் சூடிய மல்லிகார்ஜூன கார்கே, 2009 மக்களவைத் தேர்தலின் மூலம் தேசிய அரசியலில் குதித்தார். 2009, 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்ட கார்கே, வெற்றி பெற்றார்.
தனது அரசியல் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட 11 தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்ற ஒரே கர்நாடக தலைவர் கார்கே மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கைநழுவிய முதல்வர் பதவி
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், ஊரகத் துறை, சமூக நலத்துறை, உள்துறை, நிதித்துறை என கர்நாடகாவில் அவர் அமைச்சராக இருக்காத துறையே இல்லை என்கிற அளவிற்கு எல்லா துறைகளிலும் ஆளுமை செலுத்தி இருக்கிறார். அதேபோல மத்தியிலும் தொழிலாளர் மேம்பாடு மற்றும் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
கட்சியிலும் ஆட்சியிலும் ஜொலித்த கார்கேவிற்கு கர்நாட காவின் முதல்வராகும் வாய்ப்பு 4 முறை வாய்த்தது. ஆனால் கட்சியின் மற்ற உறுப்பினர்கள் அவரை ஏற்க மறுத்ததால் அந்த வாய்ப்பு கை நழுவியது.
எதிர்க்கட்சி தலைவர் பதவி?
இத்தனை முறை முதல்வர் பதவியை மறுத்தபோதும் கார்கே-வின் கட்சிப்பற்று துளியும் குறையாததாலே அவருக்கு மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றுள்ள கார்கே காங்கிரஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க் கப்படுகிறது.
44 எம்.பி.க்கள் உள்ள காங் கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கான போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாதபோதும், கார்கேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் அங்கீகாரம் கிடைக்குமா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT