Published : 04 Jun 2014 02:49 PM
Last Updated : 04 Jun 2014 02:49 PM
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக பெருகி வரும் குற்றங்கள் கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் அகிலேஷ் யாதவ் அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களை மட்டும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் மற்ற மாநிலங்களில் நடைபெறும் சம்பவங்களை பெரிதுபடுத்துவது இல்லை என அகிலேஷ் யாதவ் கூறியதை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரிஜ்ஜூ இம்மாதிரியான வெட்கப்படக் கூடிய சம்பவங்களை எண்ணிக்கை வைத்து கணிக்கக் கூடாது. மாறாக அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று கூட நடக்காமல் தடுப்பதிலேயே அரசு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரையும் வழங்கினார்.
மேலும் அவர் கூறியதாவது: "இத்தகைய சம்பவங்கள் நாட்டின் எந்த பகுதியில் நடந்தாலும் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விவகாரமே. ஆனால் உ.பி.யில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்கொடுமைகள் அனைவரது கவனத்தையும் குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனவே, உத்தரப ்பிரதேச அரசு இதுபோன்ற கொடுமையான குற்றங்களை தடுக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். உ.பி. அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநில அரசு அங்கங்கள் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதையே உள்துறை அமைச்சகம் விரும்புகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT