Published : 12 Jun 2014 10:30 AM
Last Updated : 12 Jun 2014 10:30 AM
மத்திய அரசோ உச்சநீதிமன்றமோ காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அதனை சட்டப்படி எவ்வாறு தடுப்பது என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கடந்த 3-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜூன் 4-ம் தேதி மோடியைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அனைத்து கட்சி எம்.பி.க்களும் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர். 'மத்திய அரசிடம் அத்தகைய திட்டம் இல்லை' என மோடி கூறியதாக சித்தராமையா தெரிவித்தார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பத்தை சட்டப்படி தடுப்பது என்பது குறித்து சித்தராமையா சட்ட நிபுணர்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் வழக்கறிஞர் ஆச்சார்யா உள்பட மூத்த வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்..
இதில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் ஏதேனும் புதிய மனுவை கர்நாடகா சார்பாக தாக்கல் செய்யலாமா? தமிழகம் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவிற்கு எத்தகைய தீர்ப்பு வெளியாகும்''என்பது குறித்து விவாதித்தாக தெரிகிறது.
இதனிடையே உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், காவிரி தொடர்பான வழக்குகளில் கர்நாடகாவிற்காக வாதாடி வரும் பாலி நாரிமனை சித்தராமையா பெங்களூரில் சந்தித்தார். அப்போது அவருடன் உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், சட்ட அமைச்சர் ஜெயசந்திரா மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை சட்டப்படி தடுப்பது குறித்து விவாதித்தாகாக சித்தராமையா தெரிவித்தார். வேறு தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்த பிறகும் கர்நாடக முதல்வரின் சட்ட நிபுணர்களுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT