Published : 08 Jun 2014 11:51 AM
Last Updated : 08 Jun 2014 11:51 AM
டெல்லியில் ஏகே-47 ரக கள்ளத் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியை அம்மாநில சிறப்பு போலீஸார் முறியடித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத் துப்பாக் கிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இவை பிஹாரின் முங்கேரில் தயார் செய்யப்பட்டு டெல்லிக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி சிறப்பு போலீஸார் ஒரு தனிப்படை அமைத்து, ‘ஆப்ரேஷன் முங்கேர்’ என்ற பெயரில் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், யமுனா விஹார் பகுதியின் பகத் சிங் பூங்காவுக்கு அருகில் உ.பி.யிலிருந்து கள்ளத் துப்பாக்கிகள் கொண்டு வரப்படுவதாக டெல்லி சிறப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸார், சந்தேகத்துக்கு இடமான டாடா இண்டிகா கரை சோதனை செய்தபோது, அதில் ஏகே-47 ரக துப்பாக்கி உட்பட 30 கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் அதற்கான குண்டுகளும் பிடிபட்டன.
பிஹாரின் முங்கேரில் தயார் செய்யப்பட்ட இந்த கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்த ஷமீம் (46), விஜய்பால் (32) மற்றும் தஸ்லீம் (36) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உ.பி.யின் முசாபர் நகரைச் சேர்ந்த இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முங்கேரிலிருந்து கள்ளத் துப்பாக்கிளை கடத்தி வருவதில் சிக்கல் அதிகமாகி விட்டதால், அங்கிருந்து ஆட்களை டெல்லிக்கு அழைத்து வந்து இங்கேயே தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக ரகசிய இடங்கள் அமைத்து வருவதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, 'தி இந்து'விடம் டெல்லி சிறப்பு போலீஸ் ஆணையர் எஸ்.என்.வாத்சவா கூறையில், ‘‘ஆப்ரேஷன் முங்கேர் தொடங்கிய பின் முதன் முறையாக ஏகே-47 கைப்பற் றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மட்டும் தயாரிக்கப்படும் இந்த வகை துப்பாக்கியில் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். கைத்துப்பாக்கிகளும் முங்கேரிலேயே தயாரிக்கப்பட்டு அவற்றில், ‘மேட் இன் யூ.எஸ்.ஏ.’, ‘மேட் இன் இத்தாலி’ என முத்திரையிடப்பட்டுள்ளது’’ என்றார். ஏகே-47 துப்பாக்கிகள் மட்டும் ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கப்படுவதாகவும் அவை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் வாத்சவா மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 196 கள்ளத் துப்பாக்கிகளுடன் 35 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வருடம் இதுவரை 90 கள்ளத் துப்பாக்கிகளுடன் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் டெல்லியில் இந்தியன் முஜாகிதீன், ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளிடமும், ஒடிசா மற்றும் ஜார்கண்டில் நக்சலைட்டுகளிடமும் முங்கேரில் தயாரிக்கப்பட்ட கள்ளத் துப்பாகிகள் பிடிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT