Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM
புதுடெல்லி: டெல்லியின் நீர்வளத் துரை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
டெல்லியில் உள்ள வீடுகளில், இப்போது உள்ள மழைநீர் சேகரிப்பு முறைக்கு பதிலாக புதிய முறை செயல்படுத்தப்படும். குறிப்பாக, மழை நீரை நேரடியாக ஆழ்துளை கிணறுகளில் விட நடவடிக்கை எடுக்கப்படும். ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டமான துன்காபூரில் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து அறிவதற்காக எனது தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் ராஜஸ்தானுக்கு சென்றோம். இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று பார்த்து வந்தோம். அதில் நாங்கள் திருப்தி அடைந்தோம். டெல்லியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம். மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மழை நீரை நேரடியாக குழாய்கள் அமைத்து வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு அனுப்புகின்றனர். மூடப்பட்ட குழாய்கள் மூலம் மழை நீர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது. மழை நீரும் வீணாகாது. வழக்கமாக வீடுகளுக்கு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால், துன்காபூரில் செயல்படுத்தப்படும் புதிய முறையில் இத்திட்டத்துக்கு ரூ.16 ஆயிரம் மட்டுமே செலவாகும். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையே வராது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT