Published : 06 May 2014 09:00 AM
Last Updated : 06 May 2014 09:00 AM
உத்தரப் பிரதேசம் மீரட் பல்கலை கழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 60 காஷ்மீர் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக அவர்கள் கோஷமிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி அருகேயுள்ள உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியில் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நொய்டா இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு போதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல், 3 காஷ்மீர் மாணவர்களின் அறைக் கதவைத் தட்டி திறந்துள்ளனர். இந்தியா ஜிந்தாபாத் (இந்தியா வாழ்க) என்றும் பாகிஸ்தான் முர்தாபாத் (பாகிஸ்தான் ஒழிக) என்றும் கோஷமிடுமாறு அவர்கள் கூறினர். அதற்கு காஷ்மீர் மாணவர்கள் மறுத்தபோது, போதையில் இருந்த கும்பல் அவர்களை அடித்து உதைத்து பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடச் செய்துள்ளனர்.
இதையறிந்த 100-க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள், பல்கலைக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தச் சம்பவத்துக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரித்து அறிய காஷ்மீர் இல்ல அதிகாரி லோகேஷ் குமார் ஜா நொய்டாவுக்கு சென்றுள்ளார். அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT