Published : 20 Jul 2020 06:43 AM
Last Updated : 20 Jul 2020 06:43 AM
ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவும் சூழலில், அடுத்த வாரம் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதனிடையே, சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலாட்டுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தனக்கு 20 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப் பதாகவும் அவர் தெரிவித்தார். பைலட் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி அருகே முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை பைலட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் புறக்கணித்தனர். இதையடுத்து துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரை ஆதரித்த 2 அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.
மேலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் சிபி ஜோஷி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக் கால தடை விதித்தது. இந்த விவகாரங் களால் ராஜஸ்தான் அரசியலில் குழப் பம் நீடித்து வருகிறது. அதேநேரம் அரசுக்கு போதுமான எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதால் பெரும்பான் மையை நிரூபிக்க முடியும் என காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.
மாநில கட்சியான பாரதிய பழங்குடி கட்சியின் 2 எம்எல்ஏக்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பின்னர் அரசுக்கு ஆதரவு நீடிக்கும் என அவர்கள் தங்கள் முடிவை திடீரென மாற்றிக் கொண்டனர். இந்தச் சூழலில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியுள்ளார். இது மரியாதை நிமித்த மான சந்திப்பு என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சட்டப் பேர வையைக் கூட்டுவது பற்றி ஆளுநரிடம் முதல்வர் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, அடுத்த வாரம் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கெலாட் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது.
இதனிடையே, பேரவைத் தலை வரின் நோட்டீஸுக்கு எதிராக பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இன்று விசா ரணைக்கு வருகிறது. நீதிமன்றம் பிறப் பிக்கும் உத்தரவுக்குப் பிறகு சட்டப் பேரவை கூட்டம் பற்றி முடிவு செய்யப் படும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங் கள் தெரிவித்தன.
சச்சின் பைலட்டுக்கு 30 எம்எல்ஏக் கள் ஆதரவு இருப்பதாகவும் தேவைப் பட்டால் அவர்களும் கட்சியில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும் பைலட் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அரசுக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
8 பேர் குழு அமைப்பு
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வார் லால் சர்மா, பாஜகவை சேர்ந்த சஞ்சய் ஜெயின் ஆகியோர் இணைந்து குதிரை பேரம் மூலம் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க சதி செய்ததாக காங்கிரஸ் கட்சி முன்பு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக 2 தொலைபேசி உரையாடல்களை அக்கட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பாக காங்கிரஸ் தலைமை கொறடா அளித்த புகாரின் பேரில் காவல் துறையின் சிறப்பு பிரிவு (எஸ்ஓஜி) 2 வழக்குகளை பதிவு செய்தது. இதையடுத்து பாஜகவை சேர்ந்த சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 214-ஏ (ராஜதுரோகம்), 120-பி (குற்றச்சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் இவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சஞ்சய் ஜெயினை 4 நாள் எஸ்ஓஜி காவலில் விசாரிக்க ஜெய்ப்பூர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க ஜெய்ப்பூர் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சர்மா தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அரசு நேற்று அமைத்துள்ளது.
இந்த வழக்கில் மத்திய அமைச்சர் ஷெகாவத், அதிருப்தி எம்எல்ஏ பன்வார்லால் சர்மா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக இந்த வழக்கில், அஜ்மீரைச் சேர்ந்த பரத் மலானி, பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த அசோக் சிங் ஆகியோரை எஸ்ஓஜி கைது செய்தது. இவர்கள் இருவரும் விசாரணைக்காக தங்கள் குரல் மாதிரிகளை அளிக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT