Last Updated : 17 Jun, 2020 01:11 PM

 

Published : 17 Jun 2020 01:11 PM
Last Updated : 17 Jun 2020 01:11 PM

2021-ம் ஆண்டு மார்ச் வரை மத்திய அரசு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சி ரத்து: மத்தியப் பணியாளர் பயிற்சி அமைச்சகம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அதிகாரிகளுக்கு நடப்பு நிதியாண்டு வரை வெளிநாடு சென்று பயிற்சி எடுக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்தியப் பணியாளர் பயிற்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்காக அனுப்புதல் போன்றவற்றை மத்தியப் பணியாளர் பயிற்சி அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய அரசின் பயிற்சி நிறுவனம் செய்து வருகிறது.

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், ''கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கன நடவடிக்கையைக் கையாள வேண்டும் என்ற நோக்கத்தாலும் நடப்பு நிதியாண்டு (2020-21) முழுவதும் அதிகாரிகளுக்கு வெளிநாடு சென்று பயிற்சி பெறுவதை ரத்து செய்ய மத்தியப் பயிற்சி நிறுவனத்துக்கு உத்தரவிடுகிறோம்.

அதேசமயம், மிகவும் தவிர்க்க முடியாத சூழல், கட்டாயமாகப் பயிற்சி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் ஊழியர்களுக்கு மட்டும் முன்கூட்டியே அமைச்சகத்திடம் இருந்து முன் அனுமதி பெறுதல் கட்டாயமாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பணியாளர் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.238.45 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மத்திய அரசு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் வெளிநாடு சென்று பயிற்சி அளித்தலுக்குச் செலவிடப்படும்.

இதில் டெல்லியில் உள்ள ஐஎஸ்டிஎம் பயிற்சி நிறுவனம், லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்புச் செலவுக்காக ரூ.83 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது

இந்த இரு நிறுவனங்கள் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பல்வேறு நாடுகளுக்குப் பயிற்சி நிமித்தமாகச் செல்கின்றனர். குறி்ப்பாக ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் பணியில் உள்ளவர்கள் அதிகமாகச் செல்கின்றனர். இந்த நிதியாண்டு மத்திய அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சிஅளிக்கவே தனியாக ரூ.155 கோடியும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x