167 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில், முதல் முறையாக ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் வழக்கமாக அணியும் கருப்பு நிற கோட், டை இல்லாமல் ஜூன் 1-ம் தேதி முதல் பணியாற்றப்போகிறார்கள்.
கரோனா வைரஸ் தீவிரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் பணியாற்றும் அவர்களுக்காக பிரத்தேய பிபிஇ உடை, டிக்கெட்டுகள், பெரிதாகக் காட்டும் கண்ணாடி போன்றவற்றை ரயில்வே வழங்க உள்ளது.
வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 100 ஜோடி சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்க உள்ளது. கரோனா வைரஸ் லாக்டவுனிலிருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவரும் நோக்கில் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்குகிறது.
இதுவரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ஷ்ராமிக் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்குப் பணியில்லை . ஆனால், ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களில் மீண்டும் டிக்கெட் பரிசோதகர்கள் பணி செய்ய உள்ளனர்.
இந்த சிறப்பு 200 ரயில்களில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்களுக்கான வழிகாட்டி விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவும் காலத்தில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் டை, கோட் இல்லாமல் பணியாற்றலாம். ஆனால், அவர்களின் பெயர், பதவியைக் குறிக்கும் பேட்ஜ் அணிய வேண்டும்.
டிக்கெட் பரிசோதகர்கள் அனைவருக்கும் போதுமான அளவு முகக்கவசம், முகத்தை மறைக்கும் கண்ணாடித் தடுப்பு, கையுறை, தலையை மறைக்கும் ஆடை, சானிடைசர், சோப்பு போன்றவை பாதுகாப்பு கருதி வழங்கப்படும்.
டிக்கெட் பரிசோதகர்கள் முறையாக தடுப்பு ஆடைகளை அணிந்து பணியாற்றுகிறார்களா என அவ்வப்போது ரயில் நிலையங்களில் மூத்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள்.
பயணிகளின் டிக்கெட்டைக் கையாள்வதற்குப் பதிலாக, எழுத்துகளைப் பெரிதாகக் காட்டும் குவிக்கண்ணாடி வழங்கப்படும். இதன் மூலம் டிக்கெட்டைத் தொடாமல் தொலைவிலிருந்தே பரிசோதிக்கலாம்.
ரயிலில் பணிக்குச் செல்லும் முன் அனைத்து டிக்கெட் பரிசோதகர்களும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். தெர்மல் ஸ்கேனிங் செய்யாதவர்கள், பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏதேனும் உடல்நலக் கோளாறு இருப்பதாக டிக்கெட் பரிசோதகர்கள் உணர்ந்தால் உடனடியாக உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
ரயிலில் அனைத்துப் பயணிகளும் ஏறி அமர்ந்தபின், ரயில் புறப்பட்ட பின்புதான் டிக்கெட் சரிபார்க்கும் பணியைத் தொடங்க வேண்டும். அவசர காலத்தில் தொடர்புகொள்ள டிக்கெட் பரிசோதகர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்படும்.
டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் தங்கள் உடல்நலன் சார்ந்த தகவல்களை ஆரோக்கிய சேது செயலியில் தெரிவிக்கவேண்டும். அதை செல்போனிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து அவ்வப்போது கைகளை சானிடைசர் மூலம் கழுவ வேண்டும். அடிக்கடி தொடும் பொருட்களான செல்போன், பர்ஸ், பொருட்கள் ஆகியவற்றைத் தொட்டுக் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.
டிக்கெட் பரிசோதகர்கள் பயன்படுத்தும் ஓய்வறைகள், கழிப்பறையில் கண்டிப்பாக சானிடைசர் இருக்க வேண்டும். டிக்கெட் பரிசோதகர்கள் முழுக்கை சட்டை அணிந்திருக்க வேண்டும்.
WRITE A COMMENT