Last Updated : 23 May, 2020 08:49 AM

5  

Published : 23 May 2020 08:49 AM
Last Updated : 23 May 2020 08:49 AM

அன்பின், துன்பம் தாங்கும் மனோதிடத்தின் சாதனை: 1200 கி.மீ தந்தையை அமர வைத்து சைக்கிள் ஓட்டிய பிஹார் சிறுமிக்கு இவாங்கா ட்ரம்ப் பாராட்டு

சைக்கிள் ஓட்டிய ஜோதி குமாரி, இவாங்கா ட்ரம்ப் : கோப்புப்படம்

புதுடெல்லி

ஹரியாணாவிலிருந்து பிஹார் மாநிலம் வரை 1200 கி.மீ தொலைவுக்கு நடக்க முடியாத தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து ஓட்டிய 15 வயது சிறுமிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்் மகள் இவாங்கா ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்

பிஹார் மாநிலம் தார்பங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவரின் 15 வயது மகள் ஜோதி குமார். மோகன் பாஸ்வான் கடந்த 20 ஆண்டுகளாக ஹரியாணா மாநிலம் குர்கவானில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த ஜனவரி 26-ம் தேதி மோகனுக்கு விபத்து ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார்.

இந்த செய்தி அறிந்த ஜோதி குமாரியும், அவரின்தாயும் பிஹாரிலிருந்து குர்கோவனுக்கு வந்தனர். 10 நாட்கள் மட்டும் உடன் தங்கியிய ஜோதியின் தாயார், தன்னுடைய அங்கன்வாடி சமையல்பணிக்கு மீண்டும் திரும்பிச்சென்றார். தந்தைக்கு வேண்டிய பணிகளைச் செய்து அவரை ஜோதி குமாரி கவனித்து வந்தார். மோகனும் மெல்ல குணமடைந்துவந்தார்

ஆனால் கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு திடீரென லாக்டவுன் அறிவி்த்ததால் சிறிது காலம் குர்கோவனில் ஜோதியும், மோகனும் தங்கினார். நாட்கள் செல்லச் செல்ல கையில் பணமில்லாததால், வேறு வழியின்றி தனது தந்தையை சைக்கிளின் பின்புறம் அமரவைத்து தொடர்ந்து 10 நாட்கள் பயணித்து கடந்த 17-ம்தேதி பிஹார் தார்பங்கா வந்து சேர்ந்தார் ஜோதி குமாரி.

ஜோதி குமாரி தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இதைப்பார்த்த இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு, லாக்டவுன் முடிந்தவுடன் தங்களின் சொந்த செலவில் ஜோதி குமாரியை டெல்லிக்கு அழைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது

இந்த செய்தியைப் பார்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் 15 வயது ஜோதி குமாரிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜோதி குமாரியின் புகைப்படத்தை பகிர்ந்து இவாங்கா ட்ரம்ப் புகழ்ந்துள்ளார்

இவாங்கா ட்ரம்ப் பதிவிட்ட கருத்தில் “ 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை இந்திய மக்களையும், சைக்கிள்பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்

இவாங்கா ட்ரம்புக்கு பதில் அளித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா பதிவிட்ட கருத்தில் “ 15வயது சிறுமி ஜோதி 1,200 கி.மீ பயணித்ததைப்போல் அந்த சிறுமியின் வறுமையும், விரக்தியும் புனிதப்படுத்தப்படுகின்றன. அவளுக்கு உதவ மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது, அவளுடைய சாதனையை மட்டும் வெறுமையாக போற்றுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x