Published : 08 May 2020 09:58 AM
Last Updated : 08 May 2020 09:58 AM
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அழைத்து வந்து பிரதமர் மோடி நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தினார். அதற்கு இந்த தேசம் இப்போது விலை கொடுத்து வருகிறது என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபின் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது குஜராத் மாநிலம்தான். குஜராத் மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்து 625 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 396 பேர் உயிரிழந்துள்ளனர். 1500 பேர் குணமடைந்துள்ளனர். பாதிப்பு இந்த மாநிலத்தில் தீவிரமடைந்து வருகிறது.
இந்தப் பாதிப்பு அதிகமானதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தியது காரணம் என குஜராத் மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மொடேரேவில் உலகிலேயே மிகப்பெரியதாக உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தைத் திறந்துவைத்து அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அகமதாபாத்தில் நமஸ்தே ட்ரம்ப் எனும் விளம்பர நிகழ்ச்சியை பாஜக நடத்தியது. இன்று அகமதாபாத் கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. மாநிலத்தில் கரோனாவில் இறந்தவர்களில் 73 சதவீதம் பேர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள். நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தியதால் குஜராத் மட்டுமல்ல, நாடே மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறது.
கரோனாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக அகமதாபாத் மாறியது தற்செயலானாதா என்று நினைக்கிறீர்களா? குஜராத் மாதிரி வளர்ச்சி என்பது பொய்யானது, மாயை. குஜராத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தையே இந்த குஜராத் மாதிரி வளர்ச்சி எனும் வார்த்தை அழித்துவிடும்.
மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவியதில் பாஜகவின் பங்கு என்ன என்பது குறித்து ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் விரைவில் அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு அனைத்தையும் பாஜக மறுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் என அறிவிக்கும் முன்பாகவே நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்த நிகழ்ச்சி நடந்து ஒருமாதத்துக்குப் பின்புதான் முதல் கரோனா நோயாளி குஜராத்தில் அடையாளம் காணப்பட்டார் எனத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT