Published : 06 May 2014 11:59 AM
Last Updated : 06 May 2014 11:59 AM
பேஸ்புக், ட்விட்டர், கூகுள் அமெரிக்காவின் சமூக வலைதள ஜாம்பவான்களான இவை மூன்றும் இந்திய பொதுத்தேர்தலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
வழக்கமான பிரச்சார முறைகளோடு, சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிடுவதிலும், தங்கள் கருத்துகளை பகிர்வதிலும் அரசியல் கட்சிகளும், தேர்தல் களம் காணும் வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கின்றனர்.
சமூக வலைதளங்கள் இந்திய தேர்தலில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மே 16 மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரிய வரும் என்றாலும் இந்தியாவில் இந்த மூன்று தளங்களையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
உதாரணத்திற்கு, பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் தற்போது 100 மில்லியன் பேர், ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை கடந்த ஜனவரிக்குப் பிறகு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
ஏழாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 49 மில்லியன் இந்தியர்கள் ட்விட்டரில் தேர்தல் தொடர்பான பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.
2009-ல் இந்திய அரசியல்வாதிகளில் சசி தரூர் மட்டுமே ட்விட்டரில் கணக்கு வைத்திருந்தார். அவருக்கு சுமார் 6,000 பாலோயர்ஸ் இருந்தனர். 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று ட்விட்டரில் கணக்கு இல்லாத பெரிய அரசியல் தலைவர் இல்லை என்றே கூறலாம்.
சசி தரூருக்கு தற்போது 2.16 மில்லியன் ட்வீட்டர் வாடிக்கையாளர்கள் பிந்தொடர்கின்றனர். இவர் ட்விட்டர் கணக்கு வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளில் 2-வது பிரபலமாக இருக்கிறார். முதலிடத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
பேஸ்புக்கில், நரேந்திர மோடிக்கு 14 மில்லியன் பேன்ஸ் உள்ளனர். உலகளவில் மோடியை விட அதிக பேன்ஸ் கொண்ட ஒரே அரசியல் தலைவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
இப்படி அரசியல் கட்சிகளும், தலைவர்களும், வேட்பாளர்களும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க இன்னொரு புறம் இத்தளங்கள் தங்கள் வருமானத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.
இப்படி ஆதாயம் அடைந்த எந்த ஒரு நிறுவனமும் தாங்கள் பெற்ற விளம்பர வருமானம் குறித்து வெளிப்படையாக பேச முன்வருவதில்லை. ஆனால் இதற்கு பின்னணியில் பல நூறு ஊழியர்கள் அயராது உழைத்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.
இந்திய தேர்தலை தங்கள் வியாபாரத்துக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது எப்படி என பேஸ்புக் பாலிஸி குழு மேலாளர் கேடி ஹர்பத் கூறுகையில்: "நாங்கள் கடந்த ஆண்டு இறுதியிலேயே இதற்கான ஆயத்தப் பணிகளை துவங்கி விட்டோம். இருப்பினும் மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அந்த பணிகளின் வேகம் முடுக்கிவிட்டப்பட்டது. ரியல் டைமில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் உடனுக்குடன் தேர்தல் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள எலெக்ஷன் டிராக்கர் என்ற புதிய யுக்தியை அறிமுகப்படுத்தினோம்" என்றார்.
இதே போல் ட்விட்டர் உயர் அதிகாரி ஆடம் ஷார்ப் கூறுகையில்: "தேர்தல், இந்தியாவில் ட்விட்டர் விரிவாக்கத்திற்கும் பெரும் அளவில் உதவியுள்ளது" என்றார்.
சமூகவலைதள பயன்பாடு நகர்ப்புறங்களில் மட்டுமே அதிகமாக இருந்த நிலையில், தேர்தல் காரணமான கிராமப்புறங்களிலும் இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதே போல் தேசிய கட்சிகள் மட்டுமே பயன்படுத்திய சமூக வலை தளங்கள் தற்போது பிராந்திய கட்சிகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்விட்டரில் #Election2014 அவ்வளவு பிரபலமாகி விட்டது. நாட்டின் முதல் ட்விட்டர் தேர்தல் இது என கூறும் அளவிற்கு இத்தேர்தலில் ட்விட்டர் பிரபலமடைதுவிட்டதாக ஆடம் ஷார்ப் கூறியுள்ளார்.
இதேபோல் கூகுல் ஹேங் அவுட்டும் தேர்தல் செய்திகளை வாடிக்கையாளர்களிடம் வெகு நேர்த்தியாக கொண்டு செல்கிறது. சுமார் 800 மில்லியன் இந்திய வாக்காளர்கள் இதன் மூலம் பயன்பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளில் சமூக வலைதளங்களில் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாவிட்டாலும் சமூக வலைதளங்களின் தாக்கத்தால் 3 முதல் 4% வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்திருக்கலாம் என இணையதளம் மற்றும் இந்திய மொபைல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT