Published : 01 Mar 2020 08:04 AM
Last Updated : 01 Mar 2020 08:04 AM
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏகப்பட்ட நல்ல விஷயங்களுடன் இந்தியா வருவார், இதுபோல் ஏகப்பட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்வார் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இரு நாடுகளுமே அதிபரின் பயணத்தை அப்படித்தான் பார்க்கின்றன. அதிபர் ட்ரம்ப், மனைவி, மகள், மருமகன் ஆகியோரின் 2 நாள் இந்திய பயணத்தை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுமே இந்த பயணத்தின் மூலம் தங்களிடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல கடும் முயற்சி மேற்கொண்டன. அதே நேரம், பரஸ்பர நன்மை கருதி ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பசிபிக் நாடுகள் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும். இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், சக்தி வாய்ந்த நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அமெரிக்க அதிபரின் இந்திய வருகைக்கு முன்பாகவே, பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்ற பேச்சு அடிபட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்ள உறுதியாக இருப்பதால், இந்த ஒப்பந்தங்கள் சாத்தியமாயின. வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதில், தான் சாமர்த்தியசாலி என ட்ரம்ப் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், இது ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் போன்றதல்ல. ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தில் குறிப்பாக சீனா, ஜப்பான், இந்தியாவுடனான வர்த்தகத்தில் நிலவும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து, அமெரிக்கா காரசாரமாக பேசி வருகிறது. அதேநேரம், ஒரே ஒரு கொள்முதல் மூலம் இந்த வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்து விடமுடியாது என்ற உண்மை அனைவருக்குமே தெரியும். அதற்கு, இரு தரப்பு வர்த்தகம், வர்த்தக முறை தொடர்பான விரிவான ஆய்வு அவசியம். இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக அங்குள்ள நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதுகுறித்து இரு நாடுகளும் பொறுமையுடன் பேச்சு நடத்தி முடிவுக்கு வர வேண்டும். அமெரிக்காவில் இருந்து அதிக அளவுக்கு பால் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் மோடி அரசு இந்திய விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதிபர் ட்ரம்ப் வருகையின் முக்கிய அம்சம், இந்தியா, ரூ.300 கோடி டாலர் மதிப்புக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை சுட்டு வீழ்த்தும் ஹெலிகாப்டர்களை, கடற்படைக்காக வாங்க செய்து கொண்ட ஒப்பந்தம்தான். எதிர்காலத்திலும் இதுபோல் நிறைய வாங்க வேண்டியிருக்கும். கடந்த 10 ஆண்டுகளாகவே ராணுவ ஹெலிகாப்டர்கள் முதல் கனரக சரக்கு விமானங்கள் வரை அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா அதிக அளவில் வாங்கி வருகிறது. போர் விமானங்களையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. இந்தியாவும் 2 வகையான போர் விமானங்களை வாங்க பரிசீலனை செய்து வருகிறது. போயிங், ரேத்தியான், லாக்ஹீட் நிறுவனங்களுக்கு பணத்தை அள்ளி இறைக்கும் இதுபோன்ற ஒப்பந்தங்களை செய்யாமல், உலக அளவில் எல்லோருக்கும் பயன் தரும் சூழல் மாற்றம் குறித்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கூறியிருக்கிறார். ஆனால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க கிடைக்கும் வாய்ப்பை விரும்பும் ட்ரம்ப், இதுபோன்ற விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டார்.
தங்களின் 2 நாள் பயணத்தின்போது, அகமதாபாத், ஆக்ரா, டெல்லி என சென்ற இடங்களில் எல்லாம் இந்தியாவின் கலாச்சார பெருமையை உணரும் வாய்ப்பை ட்ரம்ப் குடும்பத்தினர் பெற்றனர். போட்டோ வாய்ப்புகளைத் தாண்டி, இரு தரப்பு, பிராந்திய, சர்வதேச அளவில் பல விஷயங்களில் கருத்துகளை பரிமாறிக் கொள்ள இந்த பயணம் சிறந்த வாய்ப்பாக இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் தீவிரவாதம் குறித்தும், சர்வதேச விதிமுறைகளை சீனா மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கடுமையான வாசகங்களால் கூறப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய பசிபிக் பிராந்தியம் மட்டுமல்லாது உலக நாடுகளின் நன்மைக்காக உலகின் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ட்ரம்பின் இந்திய பயணம் உணர்த்தியுள்ளது.
- கட்டுரையாளர் : டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி, பேராசிரியர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT