Last Updated : 17 Feb, 2020 05:20 PM

 

Published : 17 Feb 2020 05:20 PM
Last Updated : 17 Feb 2020 05:20 PM

அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவதைத் தடுக்க முடியாது; ஏழைகளின் வாழ்வும் மேம்படாது: சிவசேனா விமர்சனம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

மும்பை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவதைத் தடுக்க முடியாது. ஏழை மக்களின் வாழ்வும் மேம்பாடாது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24 மற்றும் 25-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். குஜராத்துக்கு அதிபர் ட்ரம்ப் செல்ல இருப்பதை முன்னிட்டு அவரை வரவேற்க ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவதை ஒரு மகாராஜாவின் வருகை போல் பார்க்கப்படுகிறது. அகமதாபாத் நகருக்கு அதிபர் ட்ரம்ப் வருகை தரும்போது குடிசைப் பகுதிகள் அவர் கண்ணில் தெரியக்கூடாது என்பதற்காகச் சுவர் எழுப்பப்பட்டு வருவதாக அறிந்தோம்.

சுதந்திரத்துக்கு முன், பிரிட்டிஷ் மன்னர் அல்லது ராணி தங்களின் கீழ் அடிமை நாட்டுக்குச் செல்வதை வழக்கமாக வைந்திருந்தார்கள். அப்போது அவர்களை வரவேற்கத் தீவிர ஏற்பாடுகள் நடந்தன,

அதேபோன்று இப்போது வரி செலுத்துவோர் பணத்தைப் பயன்படுத்தி, அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது இந்தியர்களின் அடிமை மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஏழ்மையை ஒழிப்போம் என்று நீண்டகாலத்துக்கு முன் முழக்கமிட்டார். ஆனால், இப்போது பிரதமர் மோடி, ஏழ்மையை மறைக்க முயல்கிறார்.

அகமதாபாத்தில் குடிசைப் பகுதியை மறைக்கச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்குத் தனியாக ஏதும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா அல்லது அமெரிக்க அரசு ஏதேனும் இந்தியாவுக்கு நிதி அளித்து நாடு முழுவதும் சுவர் எழுப்பக் கூறியதா?

அகமதாபாத் நகரில் அதிபர் ட்ரம்ப் 3 மணிநேரம் மட்டுமே தங்கப் போகிறார் என்று தகவல் கிடைத்தது. ஆனால், அங்கு கட்டப்படும் சுவருக்காக அரசின் பணம் ரூ.100 கோடி செலவிடப்படுகிறது.

பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையிலான அரசியல் ரீதியான ஒப்பந்தமா? அமெரிக்காவுக்குக் கடந்த ஆண்டு பிரதமர் மோடி சென்றபோது ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அதிபர் ட்ரம்ப்புடன் சேர்ந்து பிரதமர் மோடி ஒரே மேடையில் பங்கேற்றார்

அதேபோன்று, கெம் சோ ட்ரம்ப் (குஜராத்தியில் ட்ரம்ப் நலமா) என்ற பெயரில் நிகழ்ச்சி அதிபர் ட்ரம்ப் வருகையின் போது நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் கணிசமான அளவு குஜராத்தைச் சேர்ந்த மக்கள் இருப்பதால், இந்த நிகழ்ச்சி குஜராத்தில் நடத்தப்படுகிறது

அதிபர் ட்ரம்ப்பின் இந்த வருகையில் சர்வதேசச் சந்தையில் டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுத்து நிறுத்தாது. ஏழை மக்களின் வாழ்விலும் முன்னேற்றம் வராது.

அதிபர் ட்ரம்ப் சிறந்த புத்திசாலியோ அல்லது சிறந்த நிர்வாகியோ அல்லது உலகத்தின் நலனில் அக்கறை கொண்டிருப்பவரோ அல்ல. ஆனால், வலிமை மிக்க அமெரிக்காவின் பிரதிநிதியாக வருவதால், அவரை மரியாதையுடன் நடத்துகிறோம். சில நேரங்களில் உங்கள் பணிகளை முடித்துக் கொள்ளச் சிலரிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x