Published : 10 Feb 2020 08:50 AM
Last Updated : 10 Feb 2020 08:50 AM

ராணுவத்தில் பெண் கமாண்டர் பதவி: மத்திய அரசின் பதிலுக்கு பெண் அதிகாரிகள் கண்டனம்

கோப்புப் படம்

புதுடெல்லி

விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்களுக்கு முழுமையான பணிச் சேவை வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, ராணுவத்தில் பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி வழங்கக் கூடாது? என நீதிபதிகள் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு மத்திய அரசு சார்பில் கடந்த 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆண்களை விட பெண்களுக்கு உடல் வலிமை குறைவு என்றும், இதனால் ஒரு படைக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பதவியை பெண்களுக்கு வழங்குவது சிரமம்" என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பெண் ராணுவ அதிகாரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராணுவ கமாண்டர் பதவிகளுக்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என மத்திய அரசு எவ்வாறு கூறுகிறது? மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தும் தவறான புரிதலின்அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மத்திய அரசின் பிற்போக்கான சிந்தனையையே அவை வெளிப்படுத்துகின்றன.

அனுபவ ரீதியான மற்றும்புள்ளி விவரங்களின் அடிப்படையில் எந்த தகவலையும் அரசுசேகரிக்கவில்லை. உதாரணமாக, விமானப் படையில் ஒரு படைப்பிரிவின் தலைவராக உள்ள பெண் அதிகாரி மின்ட்டி அகர்வாலின் சிறப்பான நடவடிக்கைகளை பாராட்டி அவருக்கு அண்மையில் `யுத் சேவா' விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x