Published : 05 Feb 2020 06:13 PM
Last Updated : 05 Feb 2020 06:13 PM

ஷாஹின் பாக் துப்பாக்கிச்சூடு; ஆம் ஆத்மியை சேர்ந்தவர் என்றால் 2 மடங்கு தண்டனை கொடுங்கள்: கேஜ்ரிவால் உருக்கம்

புதுடெல்லி

டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் துப்பாக்கியால் சுட்டவர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்பது உறுதியானால் அவருக்கு இருமடங்கு தண்டனை கொடுங்கள் என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

குடியரிமைச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி, ஷாஹின் பாக் பகுதிக்கு வந்த கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கபில் குஜ்ஜாரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் கபில் குஜ்ஜார், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், 2019-ல் அவர் அந்தக் கட்சியில் சேர்ந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், ஆதிஷி உள்ளிட்டோருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கபில் குஜ்ஜாரின் செல்போனிலிருந்து பெறப்பட்டுள்ளன. கபில் குஜ்ஜாரின் தந்தை கஜே சிங்கும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. கபில் குஜ்ஜாருக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இதுபற்றி கூறியதாவது:

‘‘எனக்கு அவரை பற்றி தெரியாது. அவருக்கு ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தால் அவருக்கு இருமடங்கு தண்டனை கொடுங்கள். இந்த குற்றத்தில் ஈடுபடும் மற்ற குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்றால் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுங்கள்.

தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் வேண்டாம். அதேசமயம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கேட்டுக் கொள்கிறேன்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x